

தமிழகத்திலேயே முதல்முறையாக கம்ப்ரஸர் (Compressor) இயந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு(compressed), முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லும் புதிய தொழில்நுட்பம் சென்னை தாம்பரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கம்ப்ரஸர் இயந்திரங்கள் பொதுவாக குப்பை அமுக்கும் வாகனங்கள் (Compactor Garbage Vehicles) என்றும் அழைக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட சில பெரிய நகரங்களில் இந்த இயந்திரம் பகுதி அளவில் பயன்படுத்தப்பட்டாலும், மாநகராட்சி அளவில் திட்டமிட்டு முதல்முறையாக முழுமையான செயல்பாட்டில் கொண்டு வந்தது தாம்பரம் மாநகராட்சியில் தான் என கூறப்படுகிறது.
துப்புரவு பணியாளர்கள் ஓரிடத்திலிருந்து குப்பைகளை லாரிகளில் ஏற்றிச்செல்லும் போது துர்நாற்றம் வீசாமலும் சாலையில் கொட்டாமலும் அட்வான்ஸ் டெக்னாலஜி முறையில் கொண்டு செல்லப்படும் என்ற தாம்பரம் மாநகராட்சியின் அறிவிப்புடன் இந்த புதிய நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குப்பை அள்ளும் கம்ப்ரஸர் இயந்திரம் என்பது பெரிய லாரிகளில் பொருத்தப்படும் ஒரு நவீன இயந்திரமாகும். இது சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனங்களில் உள்ள ஹைட்ராலிக் கம்ப்ரஸர் அமைப்பு மூலம் அதிக அழுத்தத்துடன் நசுக்கி, காற்று மற்றும் ஈரப்பதத்தை வெளியேற்றி, குறைந்த இடவசதிக்குள் அதிகக் குப்பைகளைச் சேமிக்க உதவுகிறது. இதன் காரணமாக சாதாரண குப்பை லாரிகளை விட 2 முதல் 3 மடங்கு அதிக எடையுள்ள குப்பைகளை இந்த இயந்திரத்தால் ஒரே நேரத்தில் கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மூடப்பட்ட கன்டெய்னர் என்பதால் அழுத்தப்படாத குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் சிதறுவது குறையும். குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றம் மற்றும் மாசுக்கள் கட்டுப்படும்.ஒரே தடவையில் அதிக அளவு எடுத்துச் செல்வதால் வாகனங்கள் பயன்பாடு மற்றும் அதற்கான எரிபொருள் செலவு குறையும்.
குறிப்பாக குப்பை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் நகர்ப்புற சுத்தம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் “மூலத்தில் குப்பை பிரிப்பு”( source segregation) போன்ற முயற்சிகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த இயந்திரத்தின் தானியங்கி, வீதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளை தானாகவே தூக்கி, லாரியின் பின்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டும் என்பதால் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை நேரடியாகக் கைகளால் அள்ள வேண்டியதில்லை என்பது சிறப்பு.