

தென் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுவதாலும், கடல் சீற்றமாக காணப்படுவதாலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றும், கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்படுவதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, குமரிக்கடல் மற்றும் குஜராத் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகவும், அலைகளின் சீற்றம் அதிகமாகவும் இருக்கும்.
எனவே இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை மற்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், மத்திய கிழக்கு - தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.