

நுற்றாண்டு காலத்தை கடந்த கார் நிறுவனமான போர்ட் , இந்தியாவில் மீண்டும் தனது தொழிற்சாலையை திறக்க உள்ளது. 1995 ஆம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இந்தியாவில் அறிமுகமான போர்ட் நிறுவனம் , பின்னர் 1998 ஆம் ஆண்டு போர்ட் இந்தியாவாக மாறியது. இந்தியாவின் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருந்த ஃபோர்ட், நடுத்தர வர்க்க கார்களை அதிகம் அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் நவீன செடன் வகை கார்கள் அதிகரிக்க ஃபோர்ட் நிறுவனம் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
ஃபோர்ட் இந்தியா அதிக கார்கள் தயாரித்து வெற்றி பெற்றாலும் ஒரு கட்டத்தில் மற்ற நிறுவனங்கள் வளர்ச்சியில் கடும் போட்டியில் திணற ஆரம்பித்தது.2019 ஆம் ஆண்டிலிருந்து சந்தைகளின் இழப்பு அபாயங்களை சரி கட்ட மஹிந்திரா நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டு முயற்சி திட்டங்களை தொடங்கியது.
ஆயினும் 2021 மே மாதம் அந்த திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டதால் , செப் 2021 போர்ட் தனது இந்திய உற்பத்திகளை நிறுத்துவதாக அறிவித்தது.
ஃபோர்ட் நிறுவனத்தின் தோல்விக்கு , அதிக எரிபொருள் விலைக் கொண்ட நாட்டில் ,அது அதிக மைலேஜ் பற்றி சிந்திக்காத காரணத்தினால் நஷ்டம் அடைந்ததாக வல்லுனர்கள் கருதுகிறார்கள்.இந்தியாவின் சந்தையில் இருந்து முற்றிலும் வெளியேறிய ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தற்போது சென்னையில் தனது பழைய உற்பத்தி ஆலையில், புதிய எஞ்சின் உற்பத்திகளை தொடங்க தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஃபோர்டு ₹3250 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்த தொகை சென்னைக்கு அருகிலுள்ள மறைமலை நகர் ஃபோர்டு ஆலையை மறுசீரமைப்பதற்கு செலவிடப்படும். முதல் கட்டமாக ₹250 கோடி முதலீட்டில் இந்த திட்டம், 600க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது.இந்த ஒப்பந்தம், செப்டம்பர் 2024 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தின் போது வழங்கிய விருப்பக் கடிதத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய அறிவிப்பு முன்பே அக்டோபர் 31 ஆம் தேதி செய்திக்குறிப்பில், ஃபோர்டு தனது சென்னை ஆலையில் பவர்டிரெய்ன் உற்பத்திக்கான தனது திட்டங்களை வெளிப்படுத்தியது.இதன் மூலம் அடுத்த தலைமுறை இயந்திரங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த உள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள ஃபோர்டின் எஞ்சின் உற்பத்தி ஆலையை இந்த திட்டம் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த ஆலை எஞ்சின்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய உள்ளது. 2029 ஆம் ஆண்டில் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்ட் இந்தியாவின் சென்னை ஆலை ஆண்டுக்கு 235,000 இயந்திரங்களைத் தயாரிக்கும் திறனைக் கொண்டிருக்கும்.
இந்தத் திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து ஆதரவளித்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி கூறுவதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச சந்தைகள் குழுமத்தின் தலைவர் ஜெஃப் மாரென்டிக் கூறினார். சென்னையில் உற்பத்தியைத் தொடங்க ஃபோர்டு எடுத்த முடிவு,தமிழ்நாட்டின் மறுமலர்ச்சியடைந்து வரும் வாகனத் துறையை மேலும் உற்சாகப்படுத்தும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் பி.ராஜா கூறினார்
