
டீ - உலகில் வாழும் பெரும்பாலான மக்களால் பருகப்படும் ஒரு பானமாகத் திகழ்கிறது. இந்தியக் கலாச்சாரத்தில் டீ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நாம் பருகும் ஒருவேளை டீ-க்கு வழக்கமாக ரூ.10 முதல் ரூ. 20 வரை செலவு செய்வோம். அதே, ஃபைவ் ஸ்டார், ஸ்டார் பக்ஸ் போன்ற ஹோட்டல்களில் ரூ. 500 முதல் ரூ. 900 வரை செலவு செய்வோமா? ஆனால், சமீபத்தில் துபாயில் உள்ள ஒரு கஃபே ரூ.1 லட்சத்திற்கு டீ வழங்கியுள்ளது. இது சமூக ஊடங்களில் ஆர்வத்தையும் விவாதத்தையும் தூண்டி வருகிறது. அப்படி அந்த விலையுயர்ந்த டீயில் என்னதான் இருக்கு?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் சுசேதா ஷர்மா துபாயில் போஹோ கஃபே என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்தக் கஃபேயில்தான் ஒரு கப் டீ இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கோல்டு கரக் சாய்' (gold karak chai) என்ற பெயரில் இந்த டீ விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு மசாலா டீ வகை. இந்த டீ வெள்ளியால் ஆன குவளையில் ஊற்றிக் கொடுக்கப்படுகிறது. அதன் மீது 24 கேரட் தங்கத்தால் ஆன காகிதத்தை வைத்து மூடி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுவதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால், இந்த வெள்ளிப் பாத்திரத்தை நினைவுப் பரிசாக தங்கள் வீடுகளுக்கும் எடுத்துச் செல்லலாமாம்.
இந்த கஃபே, தங்க கரக் டீயில் ஒரு சலுகையும் வழங்குகிறது. சில்வர் கப் இல்லாமல் இந்த டீயைப் பருகிக் கொள்ள முடியும். இதற்கு இந்திய மதிப்பில், சுமார் ரூ. 3,500 செலவு செய்ய வேண்டும். குறைந்த செலவில் ஆடம்பர சுவையை வடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தச் சலுகை இருப்பதாகக் கருதப்படுகிறது.
மேலும், இந்த துபாய் கஃபே, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு விதமான மெனுக்களை வழங்கி வருகிறதாம். அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் விருப்பப்படி, விலை மலிவான இந்திய தெருவோர உணவுகளையும் விலை அதிகம் உள்ள உயர்தர உணவுகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. அதோடு, தங்கம் தூவப்பட்ட ரொட்டி (croissants), தங்க தண்ணீர், தங்க பர்கர் மற்றும் தங்க ஐஸ்கிரீம் ஆகியவையும் இந்த கஃபேயின் மெனுவில் இடம்பெற்றுள்ளனவாம்.
இந்த தங்க கரக் டீ பற்றி உணவு விமர்சகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகிக்கொண்டு வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், இதற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.