

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்று கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் முடிந்து விட்டது. இந்த இரண்டு வாரங்களில் தவெக அரசு மீது பல்வேறு தரப்பில் இருந்தும் அடுத்தடுத்து விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. முதலில் தவெக மீது குதிரை பேரம் விமர்சனம் வைக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுகள் ஏற்படுகின்றது. மேலும் சில தினங்களுக்கு முன்பு கோவையில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியாக்கியது.
அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து அதுமட்டுமல்லாமல் தவெக அரசையும் கடுமையாக சாடி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் போது கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தொடர்ந்து தவெக கூறிக்கொண்டு இருந்த நிலையில் தற்போது அவர்கள் ஆட்சியில் என்ன நடக்கிறது என்ற விமர்சனமும் கடுமையாக எழுந்துள்ளது.
இதற்கிடையில் முதலமைச்சர் விஜய் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தவெக 300 கோடி ரூபாய் செலவு செய்து ரீல்ஸ் தயாரித்து ஆட்சிக்கு வந்துள்ளதாக தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘அவங்க (தவெக) எந்த உறுதிமொழியும் கொடுத்து ஆட்சிக்கு வரவில்லை. ரூ.300 கோடி செலவில் ரீல்ஸ் தயாரித்தார்கள். ‘ரூட்’ என்ற அமைப்பு மூலம் 1200 தொழில்நுட்ப வல்லுநர்களையும், 200 துணை நடிகைகளையும் பயன்படுத்தி தினமும் உண்மைக்கு புறம்பான தகவல்களை ரீல்ஸ்களாக உருவாக்கி பரப்பினர். மேலும், 30 ஆயிரம் வாட்ஸ் அப் குழுக்களையும், 2 லட்சம் போலி ஐடிகளையும் உருவாக்கி, சிறுவர் மற்றும் சிறுமிகள் பார்க்கும் வகையில் தவறான தகவல்களை கொண்டு சேர்த்தார்கள்’ என்று குற்றம்சாட்டினார்.
மேலும் சிஎம் சார், கோவையில் ஒரு பத்து வயது சிறுமி கொலைசெய்யட்டுள்ளார். அந்த உயிரை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா? வலைதளத்தில் தான் ஆறுதல் கூறியிருக்கின்றீர்கள். நடவடிக்கை எடுக்க சொல்லி உள்ளீர்கள்.
ஆனால் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதுபோல குற்றம் நடந்தால் சம்மந்தப்பட்டவர்களை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுவார். ஆனால் நீங்கள் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்த பிறகு தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போனில் ஆறுதல் கூறி இருக்கின்றீர்கள்.
உங்களுடைய ரீல் அந்து போய் நிறைய நாள் ஆகிவிட்டது. இன்னும் ரீல் இருக்கிறது என்று நினைத்துகொண்டு மாய வலையில் வாழவேண்டாம் என அப்பாவு முதலமைச்சர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது என தவெகவினர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனால் தற்போது தவெக ஆட்சியில் அமர்ந்த சில தினங்களிலேயே இதுபோல ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கண்டிப்பாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தவெக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.