

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது நடிப்பை நிறுத்தி விட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். அதுமட்டுமின்றி இந்த படம் விஜய்க்கு அவரது திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால், இது தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்தப் படம் சினிமாவைத் தாண்டி அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவரது ரசிகர்கள் இந்த வெளியீட்டிற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 9-ம்தேதி) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை தொடர்பான சிக்கல்களால் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் கடந்த 7-ம்தேதி அறிவித்தது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக சென்சார் சான்றிதழ் (தணிக்கைச் சான்று) வழங்கப்படவில்லை. இந்த படத்தை மறுஆய்வுக் குழு பார்ப்பதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'ஜனநாயகன்' படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் குறித்த வழக்கில் இன்று (ஜனவரி 9-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று திரைக்கு வராது என நிறுவனம் சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் ஜன நாயகன் படம் குறித்தும் விஜய் குறித்தும் தங்களது கருத்துகளையும் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் நிலவும் சர்ச்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, ‘ஜனநாயகன்’ விவகாரத்தை தேவையில்லாமல் விஜய் பெரிதாக்குவதாக சாடியுள்ளார். ‘தணிக்கை செய்து அவர்களுக்கு அனுமதியைக் கொடுப்பது யார் மத்திய அரசா, மாநில அரசா? மத்திய அரசுதானே" என்று கூறினார்.
மேற்கொண்டு பேசிய அவர், “‘ஜனநாயகன்’ தனது கடைசி படம் என்பதால் அதற்கு பில்டப் செய்வதற்காக, ரசிகர்களை கொதி நிலையில் வைத்திருக்க சென்சார் விவகாரத்தில் விஜய் பில்டப் கொடுக்கிறார். ஆந்திராவில் படம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த விவகாரத்தில் நடிகர் கைது செய்யப்பட்டார். கரூர் நெரிசலில் 41 பேர் பலியாகியுள்ளனர். எனவே, சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 12-ம் தேதி ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.