

பொதுவாக கோடை விடுமுறை வந்தாலே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நேரத்தை கழிப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.இந்நிலையில்,கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் பொது நூலகங்கள் இலவச கோடை முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முகாம்களை தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் மாணவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒரு மாத கால இலவசமாக நடத்தத் திட்டமிட்டுள்ளன.
‘கோடை கொண்டாட்டம்’ என்றழைக்கப்படும் இந்த முகாம்களில் கலைப் பயிலரங்குகள், உரையாடல் மூலமான விளையாட்டுகள், கதை சொல்லும் போட்டிகள், புதிர்கள் மற்றும் மொழிப் பாடங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகள் அம்சங்கள் இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகளை பொது நூலக இயக்குநரகம் மற்றும் வாசகர் வட்டங்கள் ஒருங்கினைந்து செய்து வருகின்றன. இந்நிகழ்விற்கான விரிவான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முழுநேர நூலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.இந்தக் கோடை முகாமின் முக்கிய நோக்கம் மாணவர்களைத் திரையிலிருந்து (Digital Detoxification) விடுவித்து, அவர்களின் படைப்பாற்றலைத் தூண்டுவதாகும்.
முகாமில் மாயாஜாலக் காட்சிகள் (Magic Shows), நாட்டுப்புறக் கலைகள், கைவினைப் பயிலரங்குகள், அறிவியல் செயல்முறை விளக்கங்கள், நாடகம், பொம்மலாட்டம், நடனம் மற்றும் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகையிலான கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முகாமில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமும் இந்த கோடைக்கால நிகழ்வுகளுடன் சில சிறப்புப் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பிரெஞ்சு மொழி, சதுரங்கம் மற்றும் ரோபோட்டிக்ஸ் (Robotics) போன்ற நவீனத் தொழில்நுட்பப் பாடங்கள் மே 1 முதல் மே 31 வரை கற்றுத்தரப்பட உள்ளன. இது மாணவர்களின் அறிவுத் திறனை வளர்ப்பதுடன், புதிய உலகளாவிய மொழிகளையும் தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த தளமாக அமையும்.
கோடை விடுமுறை என்பது வெறும் விளையாட்டுகளுடன் முடிந்துவிடாமல், நூலகங்களுக்குச் சென்று வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதுடன், சக மாணவர்களுடன் இணைந்து குழுவாகச் செயல்படும் திறனை வளர்க்க இந்த முகாம்கள் பெரும் உதவியாக இருக்கும். மின்னணு சாதனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இக்காலத்தில், குழந்தைகளை மீண்டும் புத்தகங்கள் மற்றும் நேரடிச் செயல்பாடுகளுக்குத் திருப்புவதே இந்த ‘கோடை கொண்டாட்டம்’ நிகழ்வின் முதன்மை இலக்காகும்.
தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் உள்ள நூலகங்களிலும் இத்தகைய முகாம்கள் நடத்தப்பட உள்ளது.எனவே, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் சமமான அளவில் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விடுமுறையைக் கழிக்கும் மாணவர்களுக்கு அறிவுத் தேடலுடன் கூடிய ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்க நூலகத் துறை முழு வீச்சில் தயாராகி வருகிறது.
தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால், தேர்தலுக்குப் பிறகு இந்த முகாம்களுக்கான முழுமையான கால அட்டவணை வெளியிடப்படும் என அறியப்படுகிறது.