

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கின. தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவம் (Enumeration form) சமர்ப்பிக்கும் பணிகள் டிசம்பர் 14ம் தேதியுடன் நிறைவடைந்தன.
எஸ்.ஐ.ஆர் பணிகளின் முதல் கட்டமான கணக்கீட்டுப் படிவம் நிரப்பி சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 4-ஆம் தேதி காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ) மற்றும் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு முறை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு,டிசம்பர் 14ம் தேதி கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிப்பதற்கு இறுதி நாளாக இருந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்ப்பு பணிகளுடன் வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 75,035-ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இனி இருப்பார்கள் என தேர்தல் ஆணையத்தின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.இந்த நிலையில் வாக்காளர்களுக்கு உள்ள பொதுவான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்காணும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
கணக்கீட்டுப் படிவம் பதிவேற்றப்பட்டதை உறுதி செய்வது எப்படி?
https://voters.eci.gov.in/ என்கிற தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரிக்குச் சென்று "Fill enumeration form" என்பதை தேர்வு செய்ய வேண்டும்.அதில் மொபைல் எண் மற்றும் ஓடிபி (OTP) உள்ளீடு செய்த பிறகு தோன்றும் பக்கத்தில் மாநிலத்தை தேர்வு செய்து உங்களின் எபிக் (EPIC) எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.அதன் பின் உங்கள் கணக்கீட்டுப் படிவம் பதிவேற்றப்பட்டதா என்பது திரையில் தெரிந்துவிடும்.
உங்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
எஸ்ஐஆர் பணிகள் தொடங்கும் முன்பாக இருந்த கடைசி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பார்த்தால், சில நூறு படிவங்களைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து கணக்கீட்டுப் படிவங்களும் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.படிவம் கிடைக்கப் பெறாதவர்கள் இணைய வழியாகவும் அல்லது உங்களின் வாக்குச்சாவடி நிலை அலுவரை தொடர்பு கொண்டும் சமர்ப்பிக்கலாம்.
கணக்கீட்டுப் படிவம் கிடைத்தும் சமர்ப்பிக்காதவர்கள் என்ன செய்யலாம்?
குறித்த காலக்கெடுவிற்குள் கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்காதவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு தங்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ புதிதாக சமர்ப்பித்து தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.படிவம் 6-ஐ பயன்படுத்தி புதிய வாக்காளர்கள், கணக்கீட்டுப் படிவம் கிடைக்காதவர்கள், கிடைத்தும் சமர்ப்பிக்காதவர்கள் என அனைவரும் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை பெயர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவதைச் (Claims and objection period) செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எந்தெந்த ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்?
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாக வாக்காளர் படிவத்தில் ஏதேனும் சந்தேகம் அல்லது விவரங்கள் தேவைப்பட்டால் அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் விளக்கம் கோரப்படும். அத்தகைய சூழலில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி?
வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். அதோடு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பார்வைக்கு வைக்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் ஒரு நகல் கொடுக்கப்படும். இணையதளத்தில் எபிக் எண்ணை (EPIC) உள்ளிட்டு ஒருவரின் பெயர் வரைவு பட்டியலில் வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது உங்களின் மாவட்டம், தொகுதி மற்றும் வாக்குச்சாவடியை தேர்வு செய்து அதற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இணையதளம் தவிர்த்து வாக்குச்சாவடிக்கு நேரில் சென்றும் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவரை தொடர்பு கொண்டும் உறுதி செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு வாக்குச்சாவடி மாறும் வாய்ப்பு உள்ளதா?
மறுசீரமைப்பில் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. புதிதாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படுகின்றன. அதனால், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் இடம்பெறும் வாக்குச்சாவடி மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.உங்களின் வாக்குச்சாவடிக்கான பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறவில்லை என்றால் எபிக் எண்ணை (EPIC) இணையதளத்தில் உள்ளிட்டு நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர்கள் தங்கள் ஆட்சேபனையை பதிய என்ன செய்ய வேண்டும்?
இறந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே வாக்குச்சாவடியில் ஒரு வாக்களரின் பெயர் இருமுறையோ அல்லது வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் ஒரே வாக்களரின் பெயர் இடம்பெற்றிருந்தாலோ படிவம் 7-ஐ சமர்ப்பித்து அந்த பெயர்களை நீக்கிக் கொள்ளலாம்.புதிதாக சேர்க்கப்படும் பெயர்கள் மீது ஏதேனும் சந்தேகங்கள், ஆட்சேபனைகள் இருந்தாலும் அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் இந்தப் படிவம் மூலம் அதனைப் பதிவு செய்யலாம்.வீடு மாறியவர்கள் அல்லது வாக்காளர் விவரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பவர்கள் படிவம் 8-ஐ சமர்பித்து அதனை மேற்கொள்ளலாம்.
எனவே,பொது மக்கள் மேலும் காலதாமதம் செய்யாமல் தங்களுக்கு வாக்குரிமை இருப்பதை உறுதிசெய்து கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது.