சோலார் பேனல் வாங்க போறீங்களா? இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க... மொத்த காசும் வேஸ்ட்டாயிடும்!

சோலார் பேனல்
சோலார் பேனல்
Updated on

மத்திய அரசின் உத்தரவின்படி, ஜூன் 1 முதல் உள்நாட்டு, வணிக மற்றும் தொழில்முறை சூரியசக்தி திட்டங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோலார் செல்-களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதாவது நெட் மீட்டரிங் மற்றும் ஓபன் ஆக்சஸ் முறைகளின் கீழ் நிறுவப்படும் அனைத்து சோலார் திட்டங்களிலும் இனி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோலார் செல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சூரியசக்தித் தகடுகளின் விலை அதிகரிக்கக்கூடும் மற்றும் அவற்றை நிறுவும் செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் கூறுகளான செல்-கள் தான், மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படும் பேனல்களின் (சோலார் மாட்யூல்கள்) அடிப்படைக் கட்டுமானக் கட்டங்களாகும். இந்த உள்நாட்டு செல் கொள்முதல் கட்டாயமானது, சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும், உள்நாட்டு சூரியசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோலார் மாட்யூல்கள் பயன்படுத்துவது கட்டாயமாக இருந்த நிலையில், தற்போது அதில் பயன்படுத்தப்படும் சோலார் செல்களும் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ALMM பட்டியலில் இடம்பெற்றுள்ள உற்பத்தியாளர்களின் செல்களையே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை, வீடுகளின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் சோலார் மின்சார அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் ஓபன் ஆக்சஸ் சோலார் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பொருந்தும். மத்திய அரசின் PM Surya Ghar திட்டத்தின் கீழ் பயனடையும் நுகர்வோர்களும் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டியிருக்கும்.

தற்போது சோலார் மாட்யூல் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சோலார் செல்களுக்காக இன்னும் பெருமளவில் சீனாவின் இறக்குமதியையே பெருமளவில் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதற்கிடையே, உள்நாட்டு சோலார் செல் உற்பத்தியை அதிகரித்து, புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்காலத்தில் இந்தியாவை சூரிய மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றவும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த புதிய விதிமுறையால், இந்தியாவில் சோலார் செல்களுக்கான தேவை அதிகமாக உள்ள நிலையில், அது கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், அதன் விலை உயர்வதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக தொழில்துறையினர் எச்சரிக்கின்றனர்.

இதனால் வீடுகள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சோலார் அமைப்புகளை நிறுவுவதற்கான மொத்த செலவு அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சோலார் மாட்யூல் உற்பத்தியாளர்கள், உள்நாட்டு செல்களை அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழல் உருவாகும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
20 சதுர மீட்டர் சோலார் பேனல்: சுருட்டி எடுத்துச் செல்லலாம்! சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனம் சாதனை..!
சோலார் பேனல்

குறுகிய காலத்தில் சில சவால்கள் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இந்த நடவடிக்கை இந்தியாவின் சூரிய மின்சாரத் துறைக்கு பெரும் பலன் அளிக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com