20 சதுர மீட்டர் சோலார் பேனல்: சுருட்டி எடுத்துச் செல்லலாம்! சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனம் சாதனை..!
சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான கேலக்ஸிஸ்பேஸ், செயற்கைக்கோள்களின் அளவு பிரச்சனையைத் தீர்க்கும் அற்புதமான கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. பெய்ஜிங்கைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம், ஒரு வாட்டர் பாட்டில் அளவில் சுருட்டக்கூடிய, முழுமையாக நெகிழ்வுத் தன்மை கொண்ட சோலார் பேனலை உருவாக்கியுள்ளது.
இந்த புதுமையான கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை சீனாவின் யிபின் நகரில் நடந்த இரண்டு நாள் மாநாட்டில் வெளியிட்டனர். செயற்கைக்கோள் ஏவப்படும்போது, இந்த நெகிழ்வு சோலார் பேனல்கள் உருட்டப்பட்டு, பக்கவாட்டில் பொருத்தப்படுகின்றன.
விண்வெளியில், இவை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விரிந்து, 10 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக மாறுகின்றன. “20 சதுர மீட்டர் பரப்பளவு, ஒரு மாநாட்டு அறையளவு இருந்தாலும், இது ஒரு தண்ணீர் பாட்டில் விட்டத்திற்கு சுருட்டப்படுகிறது,” என்கிறார் கேலக்ஸிஸ்பேஸ் தலைமை நிர்வாகி ஸு மிங்.
இந்த சோலார் பேனல், செயற்கைக்கோளின் எடையையும் அளவையும் குறைத்து, அதிக ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.இந்த நெகிழ்வுப் பேனலின் ஆற்றல் அடர்த்தி, பாரம்பரிய கடினமான பேனல்களை விட நான்கு மடங்கு அதிகம்.
இதனால், பல செயற்கைக்கோள்களை அடுக்கி ஏவுவதற்கு இது ஏற்றதாக உள்ளது. இணைய செயற்கைக்கோள் குழுக்கள் நீண்ட காலம் சுற்றுப்பாதையில் இருக்க இது உதவுகிறது. இதன்மூலம், செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் கணிசமாக அதிகரிக்கிறது.
கேலக்ஸிஸ்பேஸ் இதுவரை 25 செயற்கைக்கோள்களை வடிவமைத்து ஏவியுள்ளது. இவற்றில், உலகின் முதல் உயர்-அதிர்வெண், குறைந்த-புவி சுற்றுப்பாதை மில்லிமீட்டர்-வேவ் செயற்கைக்கோளும், நெகிழ்வு சோலார் பேனல்களுடன் கூடிய முதல் தட்டையான, அடுக்கக்கூடிய செயற்கைக்கோளும் அடங்கும்.
பிப்ரவரியில், பெய்ஜிங் மற்றும் தாய்லாந்தில் உள்ளவர்களுடன் நேரடி செல் தொடர்பு தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்தது. இது விண்வெளி தொடர்பு துறையில் பெரும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
கிழக்கு கடலோர நகரமான நான்டாங்கில் உள்ள அதன் நுண்ணறிவு தொழிற்சாலை 100 முதல் 150 நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களின் வருடாந்திர உற்பத்தி திறனை எட்டியுள்ளது.
இங்கு, ரோபோ கைகள் துல்லியமாக பொருட்களை எடுத்து அசெம்பிள் செய்கின்றன. “இது மனிதர்கள் மற்றும் இயந்திரங்களின் ஒருங்கிணைந்த பணி,” என்கிறார் தொழிற்சாலை தலைவர் செங் மிங். 100 முதல் 2,000 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை உற்பத்தி செய்யும் முழுமையான சங்கிலியை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
2018இல் தொடங்கப்பட்ட கேலக்ஸிஸ்பேஸ், சீனாவின் முன்னணி செயற்கைக்கோள் இணைய தீர்வு வழங்குநராகவும், உற்பத்தியாளராகவும் விளங்குகிறது. இந்த புதிய சோலார் பேனல் கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது.
இது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு புதிய பாதைகளை திறக்கும். இந்த அற்புத கண்டுபிடிப்பு, உலகளவில் விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.