'புளூ மூன்' டூ விண்கல் மழை வரை: மே மாதம் வானில் நிகழும் அரிய வானியல் அதிசயங்கள்..!

இந்த மாதம் வானத்தைக் கண்காணிப்பவர்களுக்கு கோள்கள், நிலவுகள் மற்றும் விண்கல் மழைகளை நேரடியாகக் காண பல வாய்ப்புகளை அளிக்கும்.
meteor shower
meteor showersource:vox.com
Updated on

இந்த மே மாத இரவு வானம், பல கண்கவர் வானியல் காட்சிகளை வழங்க உள்ளது. இது வானத்தைக் கண்காணிப்பவர்களுக்கு கோள்கள், நிலவுகள் மற்றும் விண்கல் மழைகளை நேரடியாகக் காண பல வாய்ப்புகளை அளிக்கும். பிரகாசமான பௌர்ணமிகள்(2 முழு நிலவு) முதல் அரிதான கோள்களின் அணிவகுப்பு வரை, இந்த மாதம்(மே) வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு பரபரப்பான மாதமாக அமையும் என நேஷனல் ஜியோகிராஃபிக் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் (மே 5, 6 ஆகிய தேதிகளில்) வானில் நட்சத்திரங்கள் சிதறி விழுவதைப் போன்ற ‘ஏட்டா அக்வாரிட்’ (Eta Aquariid) விண்கல் மழையை காணலாம். நீண்ட தடங்களைக் கொண்ட வேகமான மற்றும் பிரகாசமான விண்கற்களுக்குப் பெயர் பெற்ற இந்த விண்கல் மழை, குறிப்பாக தெற்கு அரைக்கோளத்தில், ஒருமணி நேரத்திற்கு சில டஜன் கீற்றுகள் வரை உருவாக்கக்கூடும்.

இருப்பினும்,இந்தாண்டு தேயும் பிறை நிலவு, மிகவும் பிரகாசமான விண்கற்களைத் தவிர மற்ற அனைத்தையும் மறைத்துவிடக்கூடும்.

புகழ்பெற்ற 'ஹேலியின் வால்நட்சத்திரம்' விட்டுச் சென்ற துகள்களே இவை. ஒவ்வொரு ஆண்டும் பூமி இந்த வால் நட்சத்திரத்தின் தூசிப் பாதையைக் கடக்கும்போது, அந்தத் துகள்கள் வளிமண்டலத்தில் உராய்ந்து எரிவதால் ஒளிரும் கோடுகளாகத் தோன்றுகின்றன. ஹேலி வால் நட்சத்திரம் கடைசியாக 1986ல் தென்பட்டது, மீண்டும் 2061ல் தான் வரும் என்றாலும், அதன் துகள்கள் ஆண்டுதோறும் நமக்கு இந்த விண்கல் மழையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நாளை வானில் தோன்றும் அதிசய இரத்த நிலவு!
meteor shower

மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளின் அதிகாலை வேளைகளில், செவ்வாய், சனி மற்றும் பிறை நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது கிழக்கு வானத்தில் தெரியும். அவை மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் அணிவகுத்து வரிசையாக நிற்பதைக் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, இந்த மூன்றும் அடிவானத்திற்கு சற்று மேலே ஒரே நேர்கோட்டில் தோன்றி, காலை நெருங்கும்போது மேலும் உயரமாக எழும். மே 14 அன்றும் இதே போன்ற ஒரு அமைப்பைக் காணலாம், அன்று சந்திரன் ஒரு மெல்லிய பிறையாகத் தோன்றும்.

மாதத்தின் நடுப்பகுதி, பால்வழி மண்டலத்தைக் காண்பதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகும். மே 16 (அமாவாசை) அன்று அமாவாசை வானத்தை இருட்டாக்கும், இதனால் இரவு 11 மணி முதல் அதிகாலை வரை பால்வழி மண்டலத்தின் மையப்பகுதி மிகவும் தெளிவாக ஒளிரும்.

இதை வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும். தொலைநோக்கிகள் மூலம் சுழல் விண்மீன் மண்டலம் மற்றும் சோம்ப்ரெரோ விண்மீன் மண்டலம் போன்ற தொலைதூர விண்மீன் திரள்களை (Galaxies)காண்பதற்கும் இந்தக் காலகட்டம் உகந்தது.

மே 18-ம்தேதி மாலையில், சூரியன் மறைந்த உடனேயே, பிறை நிலவும் வெள்ளிக் (Venus)கோளும் மேற்கு அடிவானத்திற்கு மேலே அருகருகே மிக நெருக்கமாக தோன்றி, சுமார் இரண்டு மணி நேரம் வரை தெரியும். வானம் இருட்டியவுடன், புதன் மற்றும் வியாழன் கோள்களையும் அருகிலேயே காண முடியும். உண்மையில் இவை இரண்டுக்கும் இடையே கோடிக்கணக்கான கிலோமீட்டர்கள் இடைவெளி இருந்தாலும், நமது பார்வைக் கோணத்தில் இவை பக்கத்து வீட்டுக்காரர்களைப் போல மிக அருகில் தெரியும். இந்த மாதத்தின் உச்சகட்ட நிகழ்வே இதுதான்!

இந்த மாதத்தின் மிக முக்கிய நிகழ்வாக மே 31-ம்தேதி ஒரு அரிதான இரண்டாவது பௌர்ணமி அதாவது புளூ மூன் வானில் தோன்றவுள்ளது. இது மிக அரிதாக நடக்கும் நிகழ்வு என்பதால் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்தச் சொல், நிலவு நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல; மாறாக, ஒரு காலண்டர் மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் தோன்றுவதையே இது விவரிக்கிறது. அதில் இரண்டாவது வரும் பௌர்ணமியை புளூ மூன் என்று அழைப்பார்கள்.

எரிமலைச் சாம்பல் இருப்பது போன்ற சில வளிமண்டல நிலைகளின் கீழ், நிலவு நீல நிறத்தில் தோன்றக்கூடும், ஆனால் இது அசாதாரணமானது.

இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த மே மாதம் முழுவதும், வானில் சிறிய சுவாரசியமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். வியாழன் கோள் (Jupiter) மேற்கு வானத்தில் அதன் பிரகாசமான நட்சத்திரங்களான பொலக்ஸ் மற்றும் காஸ்டருக்கு அருகில் தோன்றுவதால், ஜெமினி விண்மீன் கூட்டத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டு மற்ற நட்சத்திரங்களைக் கண்டறிய நமக்கு வழிகாட்டியாக இருக்கும். அதே நேரத்தில், வெள்ளி, வியாழன் கோள்கள் மாதத் தொடக்கத்தில் விலகி இருந்தாலும், மே மாத இறுதியில் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக வந்து நம்மை ஆச்சரியப்படுத்தும். மாதத்தின் தொடக்கத்தில் 40 பாகைக்குள் தோன்றி, மாத இறுதியில் சுமார் 14 பாகையாகக் குறையும். புதன் கோள் அதன் மிகப்பெரிய கிழக்கு நீட்சியை நோக்கி நகரும்போது, மாதத்தின் பிற்பகுதியில் அதுவும் மேலும் தெளிவாகத் தெரியும்.

இவற்றை ரசிப்பதற்குத் தொலைநோக்கி கூடத் தேவையில்லை. வெறும் கண்களாலேயே இந்த அதிசயங்களைக் கண்டு ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சூரியனின் 'சோலார் கர்டன்ஸ்': நாசாவின் புதிய கண்டுபிடிப்பு!
meteor shower

சந்திர நிகழ்வுகள், கோள்களின் அணிவகுப்பு மற்றும் விண்கல் செயல்பாடுகள் ஆகியவற்றின் கலவையுடன், மே மாதம் வானியல் ஆர்வலர்கள் இரவு வானத்தை ஆராய்வதற்குப் பல வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே வானில் நிகழும் இந்த அரிய நிகழ்வை தவறவிடாமல் கண்டுகளியுங்க.

logo
Kalki Online
kalkionline.com