
தமிழகத்தில் ரேஷன் அட்டை என்பது குடும்ப உறுப்பினர்களின் அடையாளமாகவும், அரசு வழங்கும் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான அட்டையாகவும் செயல்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதியோர் ஓய்வூதியம் முதல் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வகைகளை அடிப்படையாக வைத்தே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1000 ரூபாய் பெறுவதற்கு ரேஷன் கார்டே அடிப்படையான மிக முக்கியமான ஆவணமாகும்.
ரேசன் அட்டை மூலம் மானிய விலையில் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற உதவுகிறது. அதேபோல் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் பரிசுப் பொருட்களைப் பெறவும், பேரிடர் காலங்களில் அரசு வழங்கும் நிவாரணத்தொகையை பெறும் இந்த அட்டை அவசியமாகும்.
அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் பொருளில்லா அட்டை என 5 வகையான ரேஷன் அட்டைகள் செயலில் உள்ளன. குடும்பங்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து தான் அட்டை வகை தீர்மானிக்கப்படுகிறது.
தற்போது புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது, பெயரைச் சேர்ப்பது அல்லது நீக்குவது, முகவரியை மாற்றுவது போன்ற பல சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnpds.gov.in வெப்சைட்டில் சென்று, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
அதன்பிறகு புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப பகுதிக்கு சென்று அங்கே உங்கள் பெயர், குடும்ப உறுப்பினர்கள் விவரம், மொபைல் எண், ஆதார் எண், மின் கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்கவும். இறுதியாக உங்களுக்கு விண்ணப்ப நிலை குறித்து அறிந்துகொள்ள ஒப்புகைச் சீட்டு கொடுக்கப்படும். அதனை வைத்து நீங்கள் உங்களின் ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கியமான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆவணமாக இருக்கும் ரேஷன் கார்டில் இனி அடிக்கடி திருத்தம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருடத்திற்கு 2 முறை மட்டுமே ரேஷன் கார்டில் திருத்தம் கோரி விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டூபிளிகேட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம், ரேஷன் கார்டு PDF டவுன்லோடு ஆகியவற்றையும் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும் வகையில் கட்டுபாடுகளை அரசு விரைவில் அமல்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்பதால், மக்கள் அடிக்கடி திருத்தம் கோரி விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது.
இது போன்ற காரணங்களால் அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் அதிகளவு பணிச்சுமையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.