

டாபர் இந்தியாவின் சில உணவுப் பொருட்களின் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது தற்போது மக்களிடையே அதிர்ச்சி தரும் செய்தியாக பரபரப்பாக பேசப்படுகிறது.
“100%” என்ற கூற்றுக்காக, டாபர் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என அந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் சமூக ஊடகப் பதிவுகள் திங்களன்று தெரிவித்தன.
"100% இயற்கை", "100% தூய்மை" மற்றும் "100% ஆர்கானிக்" என்று மக்களை ஏமாற்றும் வாசகங்களைப் பயன்படுத்துதல், முறையான அனுமதியின்றி 'ஜைவிக் பாரத்' (Jaivik Bharat) ஆர்கானிக் லோகோவைப் பயன்படுத்துதல், FSSAI எச்சரித்தும் நிறுவனம் திருத்தம் செய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் கூறுகிறது.
மக்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தும் தேன், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய், தேங்காய்ப் பால் போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததற்காக டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இணையதளத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களில், நூறு சதவீதம் இயற்கையானது, 'நூறு சதவீதம் தூய்மையானது', போன்ற கூற்றுகளின் பயன்பாடு, நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடியதாக இருப்பதால், விதி மீறல் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் தவறான கூற்றுக்களைக் கொண்ட மற்ற அனைத்து உணவுப் பொருட்களின் விற்பனையையும் உடனடியாகத் தடை செய்யவும், மேலும் 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை (ATR) சமர்ப்பிக்கவும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு FSSAI உத்தரவிட்டுள்ளது .
"எங்களுக்கு FSSAI-யின் அறிவிப்பு கிடைத்துள்ளது, மேலும் எங்கள் இணையதளத்தில் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கத்தைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்," என்று டாபர் செய்தித் தொடர்பாளர் மின்ட் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியான FSSAI அங்கீகாரம் இல்லாமலேயே, டாபர் ஹிமாலயன் ஆர்கானிக் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் டாபர் ஆர்கானிக் தேன் ஆகியவற்றில் ஜெய்விக் பாரத் சின்னம் இடம்பெற்றுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது. இது FSS (ஆர்கானிக் உணவுகள்) ஒழுங்குமுறைகள், 2017-க்கு முரணானதாகும்.
FSSAI- க்கும் டாபர் நிறுவனத்திற்கும் இடையேயான இதேபோன்ற ஒரு சர்ச்சை 2025-ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வணிகத் தொடர்ச்சிக்காக FSSAI வெளியிட்ட ஜூன் 2024 அறிவிப்புக்கு இணங்க, தனது லேபிளை “100% பழச்சாறு” என்பதிலிருந்து “100% கூடுதல் சர்க்கரை மற்றும் பதப்படுத்திகள் சேர்க்கப்படாதது” என மாற்றியதாக அந்நிறுவனம் அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தவறான 100% வாக்குறுதிகளை நிறுத்துமாறு முன்னர் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த வணிக நிறுவனம் திருப்தி தரும் திருத்த நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று ஒழுங்குமுறை ஆணையம் மேலும் தெரிவித்தது.இந்த நடவடிக்கை மற்றும் தடை காரணமாக டாபர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த சில நாட்களாகக் குறைந்துள்ளதாக தெரிகிறது. ஜூலை இறுதியில் ஜூன் காலாண்டின் நிதிநிலை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து நிறுவனத்தின் நிகர லாபம் 15% அதிகரித்து ₹591 கோடியாக உயர்ந்த போதிலும், சில சந்தை ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எச்சரிக்கை காரணமாக பங்கு சரிந்தது. இதன் பங்கு மதிப்பு சுமார் 2% முதல் 4% வரை சரிவைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.
டாபர் நிறுவனத்தின் துவக்கம் :
டாக்டர் எஸ். கே. பர்மன் (Dr. S. K. Burman)1884 ல் துவங்கப்பட்டு உத்தரப் பிரதேசம்,காசியாபாத்தை (Ghaziabad) தலைமையகமாகக் கொண்டு செயல்படும் Dabur India டாபர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத மற்றும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஆயுர்வேத மருந்துகள், தனிநபர் பராமரிப்பு, சுகாதாரப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பில் சிறந்த உலகின் மிகப்பெரிய ஆயுர்வேத நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக 250-க்கும் மேற்பட்ட மூலிகை மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.120-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தயாரிப்புகள் கிடைக்கின்றன.இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என பரந்த விநியோகம் மற்றும் விற்பனை வலையமைப்பைக் கொண்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு பணி வாய்ப்பு வழங்கி வருகிறது.
ஆயுர்வேத பாரம்பரிய அறிவையும் நவீன அறிவியலையும் இணைத்து, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கான தரமான தயாரிப்புகளை வழங்குவதே டாபர் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும் என மக்களிடம் விளம்பரங்கள் மூலம் ஆயுர்வேத பொருள்கள் மீதான நம்பிக்கையை பெருக வைத்ததில் டாபர் நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
எனினும் தற்போது வந்துள்ள இது போன்ற தடை உத்தரவு பயனாளர்களின் நம்பிக்கையை இழக்க வைக்கும் வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவுகிறது. இதை எப்படி சரிசெய்யப்போகிறது இந்நிறுவனம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.