

இயற்கை வரலாற்றில் எண்ணற்ற அதிசயங்கள் மற்றும் மர்மங்கள் உண்டு. இவற்றைப் பற்றி ஆராயும் ஆர்வமுள்ளவர்கள் உலகம் முழுவதும் வலம் வருவார்கள். அப்படி அறிவியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கண்டுபிடிப்பு சில சமயங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.. அப்படி ஒரு விஷயம் தான் கிட்டத்தட்ட அழிந்து விட்டதாக கருதப்பட்ட ஒரு பறவையின் வருகை. இது விஞ்ஞானிகளிடையே ஆச்சரியம் தந்துள்ளதாகவும் உலகம் உற்றுக் கவனிக்கும் மர்மமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற இயற்கை அறிவியலாளர் மற்றும் உயிரியல் விஞ்ஞானி ஆன சார்லஸ் டார்வின் 1831–1836 காலத்தில் HMS Beagle என்ற கப்பலில் உலகைச் சுற்றிப் பயணம் செய்து பல்வேறு உயிரினங்கள் மற்றும் இயற்கை சூழல்களை ஆய்வு செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
அவ்வகையில்,புளோரியானாவின் கலபகோஸ் தீவுக் கூட்டத்திற்கு அவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோது ஒரு பறவையைப் பார்த்து, அதன் மாதிரியை பதிவு செய்தார். அங்கு இப்பறவையைக் கண்டதாகப் பதிவுசெய்த கடைசி நபர் அவரே ஆவார் என்றும் அதற்குப் பிறகு இரு நூற்றாண்டுகளாக அது காணப்படாமலே போனதாகவும் இதனால் அந்தப் பறவை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே ஆய்வாளர்கள் நினைத்தனர். ஆனால், இப்போது கலபகோஸ் ரயில் பறவை எனப்படும் அந்தப் பறவை மீண்டும் வருவதைக் காண முடிவதாக விஞ்ஞானிகள் வியப்புடன் கூறுகின்றனர்.
ஃப்ளோரியானாவை மீட்டெடுக்கும் அமைப்புகளில் ஒன்றான 'ஐலேண்ட் கன்சர்வேஷன்' நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு வனவிலங்கு கால்நடை மருத்துவரான பவுலா காஸ்டானோ கலபகோஸ் ரெயில் பறவையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை,. அது ஃப்ளோரியானாவில் திடீரெனத் தோன்றியது, என்றும் ஒருவேளை அது இத்தனை காலமும் ஒரு சிறிய, மறைவான, கவனிக்கப்படாத இனமாக அங்கேயே தங்கியிருந்திருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
கலாபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள, மக்கள் வசிக்கும் இந்தச் சிறிய தீவில் இப்பறவை அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டாலும் , கூச்ச சுபாவமுள்ள, ஏறக்குறைய பறக்க இயலாத இந்தப் பறவை, மற்ற சில தீவுகளில் இன்னும் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு, புளோரியானாவில் இருந்து எலிகள் மற்றும் காட்டுப் பூனைகள் அகற்றப்பட்ட பிறகு, இந்தப் பறவை மீண்டும் அங்கு தோன்றி இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காணாமல் போன இந்தப் பறவை எப்படித் திரும்பியது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.
குறிப்பாக ஆக்கிரமிப்பு வேட்டையாடிகளான எலிகள், பூனைகளின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்ட கலாபகோஸ் பறவைகள்.200 ஆண்டுகளுக்குப் பிறகு, வியக்கத்தக்க மீள்வருகை மற்றும் புதுமைப் படைப்புகளை நிகழ்த்தி வருகின்றன.
மேலும் "கடந்த ஆண்டு வரை மிகவும் அரிதானவையாகக் கருதப்பட்ட இந்த உயிரினங்கள் திடீரெனப் பெருமளவில் பெருகியுள்ளன," என்கிறார் வியன்னா பல்கலைக்கழகத்தின் நடத்தை உயிரியலாளரான சோனியா கிளைண்டோர்ஃபர். இவர் தனது குழுவுடன் இணைந்து, கடந்த 20 ஆண்டுகளாக ஃப்ளோரியானா மற்றும் பிற தீவுகளில் உள்ள பல்வேறு சிட்டு இனங்களை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. "இது ஒரு குறிப்பிடத்தக்க, உடனடியான மீள்வருகை," என்றும் அவர் மேலும் கூறியுள்ளது பரிணாம வளர்ச்சியின் ஆய்வாளர்களை கவனிக்க வைத்துள்ளது.
கடந்த 2023இன் பிற்பகுதியில், பத்து ஆண்டுக்கால தயாரிப்புப் பணிகளுக்குப் பிறகு, புளோரியானாவின் பூர்வீக சூழலியலை மீட்டெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக எலிகள் மற்றும் காட்டுப் பூனைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025இல் எடுக்கப்பட்ட பறவை கணக்கெடுப்பில், முன்பு அரிதாக இருந்த கலபகோஸ் புறாக்கள், லாவா பல்லிகள், ஓணான்கள், கருப்பு அலகு குயில்கள் ஆகியவை இப்போது அடிக்கடி தென்படுவதாக சார்லஸ் டார்வின் அறக்கட்டளையின் ஆய்வாளர் பர்கிட் ஃபெஸ்ல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் "ஆனால் மிக உற்சாகமான கண்டுபிடிப்பு கலபகோஸ் ரயில் பறவையின் மீள்வருகைதான். இந்தப் பறவை பல நூற்றாண்டுகளாக புளோரியானாவில் பதிவு செய்யப்படவில்லை. அதன் இருப்புக்கான ஒரே வரலாற்று ஆதாரம் டார்வின் சேகரித்த ஒரு மாதிரி மட்டுமே," என்றும் இந்த மர்ம பறவை பற்றி குறிப்பிடுகிறார்.
என்ன சிறப்பு இந்த சின்னஞ்சிறு பறவைகளிடம்?
கலபகோஸ் பறவைகள் (Galápagos Finches) என்பது சிறிய குருவி போன்ற பறவைகளின் இனமாகும். இவை பசிபிக் பெருங்கடலில் உள்ள கலபகோஸ் தீவுகளில் வாழ்கின்றன. இவை சுமார் 15–18 வெவ்வேறு இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து இனங்களும் ஒரே பொது மூதாதையரில் இருந்து தோன்றி, காலப்போக்கில் வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப மாறியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு இனத்தின் அலகின் (Beak) வடிவமும் அளவும் அவை உண்ணும் உணவுக்கு ஏற்றவாறு மாறியுள்ளன:
தடித்த அலகு: கடினமான விதைகளை உடைக்க.
நீளமான மெல்லிய அலகு: பூச்சிகள் அல்லது மலர்களில் இருந்து உணவு பெற.
சில இனங்கள் கள்ளிச்செடிகளின் பூக்கள் மற்றும் பழங்களையும் உண்கின்றன.
1835-ஆம் ஆண்டு டார்வின் கலபகோஸ் தீவுகளுக்கு சென்றபோது, இந்த பறவைகளின் வேறுபாடுகளை ஆய்வு செய்தார். இந்த கவனிப்புகளே பின்னர் 'இயற்கைத் தேர்வு' (Natural Selection) மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய அவரது புகழ்பெற்ற கோட்பாட்டை உருவாக்க உதவின.
மேலும், கலபகோஸ் பறவைகள் ஒரே மூதாதையரில் இருந்து பல்வேறு இனங்கள் சூழலுக்கு ஏற்ப எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான உலகப் புகழ்பெற்ற உதாரணமாக கருதப்படுகின்றன. எனவே, பரிணாம உயிரியல் ஆய்வில் இவை மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளன.
காணாமல் போன 'ரயில் பறவை' மீண்டும் திரும்பியது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. வேட்டையாடிகள் இல்லாத தற்போதைய சூழலில், மறைந்துபோனதாக கருதப்படும் மேலும் பல உயிரினங்கள் வெளியில் வரும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.