இந்தியன் ரெயில்வே, ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட், முதன் முதலாக 3D கட்டுமான ப்ரிண்டிங் முறையை உபயோகித்து, 'கேங்மேன்' (GANG MAN) வசதிக்காக, Hut ஒன்றை 25 நாட்களுக்குள் கட்டி முடித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாகும்.
ஆந்திர பிரதேசத்திலுள்ள வால்டர் டிவிஷனில் வரும் பார்வதிபுரம் ரெயில் நிலையத்தில் இந்த Hut கட்டப்பட்டுள்ளது. சுமார் 1076 சதுர அடிகளைக் கொண்ட Hut, ரெயில்வே பராமரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், தேவையான கருவிகளை சேமித்து வைக்கும் இடமாகவும் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய ரொபோடிக் மெஷின் உதவியுடன் இந்த hut கட்டப்பட்டுள்ளது.
1980களில், 3D ப்ரிண்டிங் நுட்பங்கள் செயல்பாட்டு அல்லது அழகியல் முன்மாதிரிகளின் உற்பத்திக்கு மட்டுமே பொருத்தமானதாகக் கருதப்பட்டன. 3D ப்ரிண்டிங்கின் முக்கிய நன்மைகளில் ஒன்று மிகவும் சிக்கலான வடிவங்கள் அல்லது வடிவவியலை உருவாக்கும் திறன் ஆகும். இது கையால் கட்டமைக்க முடியாததாக இருக்கும். இதில் வெற்று பாகங்கள் அல்லது உள் டிரஸ் கட்டமைப்புகளைக் கொண்ட பாகங்கள் அடங்கும். அதே நேரத்தில் குறைந்த பொருள் கழிவுகளை உருவாக்கும் தன்மை கொண்டது.
கட்டுமான 3D ப்ரிண்டிங் விபரம் மற்றும் பயன்கள் :-
கட்டுமான 3D ப்ரிண்டிங் என்பது கட்டிடங்கள் மற்றும் கட்டுமான கூறுகளை உருவாக்கப் பயன்படுத்தும் ஒரு முறையாகும். இது நேரம், பொருட்கள், உழைப்பு மற்றும் செலவுகளை மிச்சப்படுத்துகிறது. தவிர, கட்டுமானத்தின் நிலைத் தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை மேம்படுத்துகிறது.
கணினி வடிவமைத்த மாதிரியை போல, அடுக்கடுக்காக பொருட்களை அடுக்குகிறது. வழக்கமான கட்டுமான பணிகளிலிருந்து வேறுபட்டது. பெரிய வீடுகள், பாலங்கள், கட்டிடங்களை உருவாக்கலாம். கட்டுமான நேரம், தொழிலாளர் செலவு, சிக்கலான வடிவமைப்புக்களை உருவாக்கல், கட்டுமான பொருட்கள் சேமிப்பு, சுற்றுப்புறச் சூழல் தாக்கம் குறைதல் போன்றவை இதன் பயன்கள் ஆகும்.
இந்தியாவில் பல நிறுவனங்கள் 3D கட்டுமான ப்ரிண்டிங்கை உபயோகிக்க ஆரம்பித்துள்ளன. எதிர்காலத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு அருமையான தொழில் நுட்பமாகிய 3D கட்டுமான ப்ரிண்டிங்- ஐ வரவேற்போம்.