
மன்னிப்பு என்பது உடலுக்கும் மனதுக்கும் அற்புதமான நன்மைகளைத் தரும் ஒரு சக்தி வாய்ந்த செயலாகும். இது எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் சுமைகளை மனதில் இருந்து விடுவித்து குணப்படுத்தும் ஒரு சுத்திகரிப்பு செயல் முறையாக உள்ளது. மன்னிப்பு எவ்வாறு உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி மேம்படுத்துகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மன்னிக்கும் பண்பு மனதுக்கு தரும் நன்மைகள்:
மனத் தூய்மை: யாராவது நம்மை வார்த்தைகளால் காயப்படுத்தி மனது புண்படுமாறு பேசி அல்லது அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டிருந்தால் அது மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்த நபர் மீது ஒருவிதமான வெறுப்பு உண்டாகி மனதில் தேங்கி விடும். நீண்ட நாட்களாக அந்த வெறுப்பை சுமந்து கொண்டே இருக்கும்போது அது மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஆனால், மன்னிப்பு என்கிற மாமருந்து இதற்கு நல்ல பதிலாக அமைகிறது.
சம்பந்தப்பட்ட நபரை மனதார மன்னிக்கும்போது அவர் மீது இருந்த வெறுப்பு குறைந்து மனம் அமைதி அடைகிறது. மனம் தூய்மையாவதுடன் இத்தனை நாட்களாக அங்கே இருந்த வெறுப்பு, விரக்தி, கோபம் அனைத்தும் அகன்று அங்கே அமைதியும் அன்பும் நிலவும்.
சவால்களை சமாளிக்கும் திறன்: மன்னிக்கும் குணத்தைத் தொடர்ந்து வாழ்வில் பயிற்சி செய்வதனால் பலவித நன்மைகளைப் பெறலாம். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், சவால்களை சமாளிக்கவும், விரைவிலேயே அவற்றிலிருந்து மீண்டு வரும் ஆற்றலையும் பெறலாம். எதிர்மறையான உணர்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனைப் பெறலாம்.
சுயமரியாதை மேம்படுதல்: மற்றவர்களை மன்னிக்கும்போது தன்னுடைய கடந்த காலத் தவறுகள் அல்லது குறைபாடுகளை சேர்த்தே மன்னிக்கும் குணமும் வளரும். இது தன் மீது சுய இரக்கத்தை வளர்த்து சுயமரியாதையை மேம்படுத்துகிறது. தன்னைப் பற்றிய கடுமையான சுய தீர்ப்பு இல்லாமல் தன்னையும் தன் அனுபவங்களையும் ஏற்றுக்கொள்ள உதவுகிறது.
உறவு மற்றும் நட்பு மேலாண்மை: இதனால் பிறருடனும் அன்புடன் பழக உதவுகிறது. தன் மீது கொண்டிருக்கும் மனக்கசப்பை குறைப்பதற்கு மன்னிப்பு உதவுகிறது. எண்ணங்களின் நச்சுத்தன்மையை குறைத்து மனதை வாழ்வில் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இதனால் நல்ல உறவு மற்றும் நட்பு மேலாண்மையை கடைப்பிடிக்க முடியும்.
உடல் ரீதியான நன்மைகள்: பிறர் மீது ஏற்படும் கோபம், வெறுப்பு, விரோதம் போன்றவை இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால், மன்னிப்பு மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை குறைப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மன அழுத்தம் குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுகிறது. பிறர் செய்த தீமைகளை எண்ணி மனம் கலங்குவதால் இரவுத் தூக்கம் தடைபடுகிறது. ஆனால், மன்னிப்பதன் மூலம் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. எனவே, மன்னிப்பு என்பது பிறருடைய நலனுக்காக செய்யும் ஒரு தன்னலமற்ற செயல் மட்டுமல்ல, தனக்கே செய்து கொள்ளும் ஒரு மிக அருமையான நன்மையாகும்.