காசாவில் போருக்கு நடுவில் நான்கு நாட்களுக்கு முன்னர் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்க சென்றிருக்கிறார் தந்தை. அப்போது இஸ்ரேல் ராணுவம் அவர்கள் வீட்டைத் தாக்கிய செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் காசா போரினால் மனிதநேயம் என்பது சற்றும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழவே பெரிய பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த போரிலிருந்து தப்பிக்க மக்கள் பலரும் அகதிகளாக வேறு நாட்டிற்கு தப்பி ஓடுகின்றனர். தப்பிச் செல்லும் மக்கள் இஸ்ரேலிருந்து 10கிமீ தொலைவில் இருக்கும் யூனிஸ் என்ற நகரத்தில் தஞ்சம் அடைகின்றனர்.
இந்தநிலையில்தான் போருக்கு நடுவே நான்கு நாட்களுக்கு முன்னர் ஒரு தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைப் பிறந்திருக்கிறது. இந்த போருக்கு இடையில் இரட்டையர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்தனர். இந்த நாட்டைவிட்டு அகதிகளாக வேறு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பிறப்பு சான்றிதழ் தேவை. ஆகையால், குழந்தைகளின் தந்தை வீட்டில் அவர்களை விட்டுவிட்டு தனியாக அலுவலகத்திற்குச் செல்ல முடிவெடுத்தார்.
ஏனெனில், குழந்தைகளின் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மிகவும் சோர்வுடன் இருந்தார். மேலும் போருக்கு நடுவில் குழந்தைகளைத் தூக்கி செல்ல இயலாது. போர் ஆரம்பித்ததிலிருந்து அவர்களை தனியாக விட்டுச் செல்லாத அவர், அன்று முதல் முறையாக தனியாக விட்டுச் செல்லும்போது மிகவும் கஷ்டப்பட்டார். இந்நிலையில் அரசு அலுவலகத்திற்கு சென்று தனது இரண்டு குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வாங்கி கொண்டு திரும்பியுள்ளார்.
ஆனால் அதற்குள் அவரது வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டுகள் தாக்கியிருந்தன. அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து கிடந்தனர்.
அகதிகளாக சென்று தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றி நிம்மதியான வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்று எண்ணிய அந்த தந்தைக்கு இப்போது குடும்பமே இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இன்னும் எத்தனை பெற்றோர்களின் கதறல்கள் அங்கே கவனிக்கப்படாமல் இருக்கிறதோ?