தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாவது, "டிசம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் டிசம்பர் 15 ஆம் தேதி காலை வரை சென்னை மற்றும் தமிழ்நாட்டில் ஜெமினிட் விண்கல் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
இது விண்கல் மழையின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. ஜெமினிட் விண்கற்கள் முதன்முதலில் 1800-களின் நடுப்பகுதியில்தான் தோன்றத் தொடங்கியது.ஆரம்பத்தில், மணிக்கு 10 முதல் 20 விண்கற்கள் மட்டுமே தெரிந்ததால், அவை பிரம்மாண்டமானவையாகக் கருதப்படவில்லை. இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக, இந்த விண்கல் மழை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஜெமினிட் விண்கல் மழையை ஆண்டுதோறும் நிகழும் வலிமையான விண்கல் மழைகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
விண்கல் மழை என்றால் என்ன?
விண்வெளியில் வால் நட்சத்திரங்கள் (Comets) சூரியனைச் சுற்றி வரும்போது, அவற்றிலிருந்து வெளியேறும் சிறிய பாறைத் துகள்கள் மற்றும் தூசிகள் அந்தப் பாதையிலேயே தங்கிவிடும். பூமி தனது சுற்றுப்பாதையில் பயணம் செய்யும்போது, அந்தத் தூசி மண்டலத்தைக் கடக்கும்போது அவை பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படுகின்றன.
பூமியின் வளிமண்டலத்தில் (Atmosphere) இந்தப் பாறைத் துகள்கள் மிக அதிவேகமாக நுழையும்போது, காற்றோடு ஏற்படும் உராய்வினால் (Friction) அவை வெப்பமடைந்து எரியத் தொடங்குகின்றன. இதுவே நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது "எரி நட்சத்திரம்" அல்லது "விழு நட்சத்திரம்" போலத் தெரிகிறது.சாதாரணமாக ஒரு நாளில் ஓரிரு எரி நட்சத்திரங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், பூமி ஒரு வால் நட்சத்திரத்தின் பாதையைக் கடக்கும்போது, ஒரு மணி நேரத்திற்குப் பத்தாயிரம் முதல் லட்சக்கணக்கான துகள்கள் வரை வளிமண்டலத்தில் நுழையும். அப்போது வானத்தில் சரமாரியாக ஒளிக்கீற்றுகள் தோன்றுவதால் இது "விண்கல் மழை" என்று அழைக்கப்படுகிறது.
விண்கல் மழை பார்க்கும் நேரம்:
டிசம்பர் 14 இரவு முதல் டிசம்பர் 15 அதிகாலை வரை இந்த விண்கல் மழை நிகழ்வை பார்க்கமுடியும். அதிகாலை 2 மணி என்பது இதை பார்க்க சிறந்த நேரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான இருள் இருக்கும் சூழலில் ஒரு மணிநேரத்திற்கு 100 வரை விண்கற்கள் மழையை பார்க்கலாமாம்.விண்கற்கள் எங்கும் தோன்றும். தொலைநோக்கி அல்லது பைனாகுலர் எதுவும் தேவையில்லை" என குறிப்பிட்டார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இவற்றை பார்க்க முடியும். இந்த விண்கல் மழையை இருண்ட இடத்தில் இருந்து பார்க்க முடியும். நள்ளிரவு நேரத்தில் மறுநாள் காலை 2 மணியளவில் பார்க்க முடியும்.கண்கள் இருளுக்கு முழுமையாகப் பழகுவதற்கு 20 நிமிடங்கள் ஆகும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். விண்கற்கள் கொத்து கொத்தாகத் தோன்றி, பின்னர் இடைவெளி விடும், எனவே பொறுமையாக இருங்கள். வசதியாகப் படுத்துக்கொண்டு முழு வானத்தையும் கவனியுங்கள்; விண்கற்கள் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். தொலைநோக்கி அல்லது பைனாகுலர் எதுவும் தேவையில்லை, உங்கள் கண்களும் சிறிது பொறுமையும் மட்டும் போதும்" என தெரிவித்திருக்கிறார்.