

இந்தியாவில் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து படிக்க வரும் மாணவர்களின் கல்விக்காக சிறப்பான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதுடன் அவர்கள் கல்வி பயில உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (NMMS Scheme) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வின் மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 6,695 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். NMMS தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000ம், ஆண்டுதோறும் 12,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும். அதாவது இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி 8-ம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வியாண்டு கல்வி உதவித்தொகைக்கான NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் டிச.15-க்குள் (திங்கள்கிழமை) www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது. அதன் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேர்வு கட்டணமாக 50 ரூபாயை சேர்த்து வரும் டிசம்பர் 20-ம்தேதிக்குள் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்பிக்க வேண்டும். NMMS தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க உள்ளது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.