
ஊதிய உயர்வு, பணிநிரந்தம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பாக இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த போராட்டத்தை நடத்த 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அரசு பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிற்சங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முழுமையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழகத்தில் பொது வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மாநகரப்பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
தி.நகரில் இருந்து கிளாம்பாக்கம், பிராட்வே, கோயம்பேடு, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எப்போதும் போல் தங்கள் பணிகளுக்கு செல்கின்றனர்.
வடபழனி பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டது. வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும் எந்த தொந்தரவும் இல்லாமல் பேருந்துகளில் தங்கள் பணிகளுக்கு செல்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் 490 தொலைதூரப்பேருந்துகளும், 430 நகரப்பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டது. அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நகர பேருந்துகளும், 250க்கும் மேற்பட்ட வெளியூர் பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டது.
பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படவில்லை என்றும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால் இன்று பேருந்துகள் ஓடாது என்ற அறிவிப்பால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தபால் நிலையங்கள், வங்கிகள் ஆகியவற்றை இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளால் இவற்றின் சேவைகளில் சிறிது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் இன்று ஆட்டோக்கள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளதால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. ஒருசில ஆட்டோக்கள் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்கிறது.
அதேசமயம் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்காது என ஏற்கனவே அறிவித்துள்ளதால் தமிழகத்தில் கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும். அதேபோல் மருத்துவமனைகளின் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று காலை 10 மணிக்கு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
அதேசமயம் இந்த போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது என்று அறிவித்துள்ள தமிழக அரசு, பணிக்கு வராவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இன்று பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.