கேரளாவில் மொபைல் ஃபோன் வெடித்து சிறுமி பலி!

கேரளாவில் மொபைல் ஃபோன் வெடித்து சிறுமி பலி!
Updated on

கேரள மாநிலம் பழையனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி ஆதித்யஸ்ரீ. சம்பவ தினத்தன்று சிறுமி தன் வீட்டில் மொபைல் ஃபோனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென மொபைல் ஃபோன் வெடித்துச் சிதறியதாகத் தகவல். வெடிக்கும் போது மொபைல் ஃபோன் சார்ஜரில் போடப்பட்டிருந்தது. சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த போது சிறுமி மொபைல் ஃபோனை இயக்கி வீடியோ பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஃபோன் வெடித்துச் சிதறி இருக்கிறது. மொபைல் ஃபோன் வெடித்த சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளுக்குக் கேட்கும் வகையில் சற்று அதிக சத்தத்துடனே இருந்திருக்கிறது என அண்டை வீட்டுக்காரர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

மொபைல் ஃபோன் வெடித்துச் சிதறியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். சிறுமியின் உயிரற்ற உடலைக் கண்டு அவரது பெற்றோர் கதறித் துடித்த காட்சி அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்வதாக இருந்தது. மொபைல் ஃபோன் வெடித்து சிறுமி உயிரிழந்த செய்தி கேட்டு அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் நாள்தோறும் சுமார் 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் வெடித்து சிதறுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதில் பெரும்பாலானவை ஸ்மார்ட்போன்கள் தான். செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே, அழைப்புகளை பேசுவதாலும், தொடர்ந்து சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கையில் செல் ஃபோனை இயக்கி வீடியோ பார்ப்பது, கேம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாலும் செல்ஃபோன் பேட்ட்டரி சூடாகிறது. ஒருகட்டத்தில் பேட்டரியின் திறன் குறைந்து ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட் ஃபோன்கள் வெடிக்கின்றன . அது உண்மைதான்.

செல்போன்களில் வெடிக்கக்கூடிய ஒரே சாதனம் பேட்டரி தான். அது வெடிக்கும் போது தான் செல்போன் மொத்தமாக வெடித்து சிதறுகிறது என்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? உங்கள் போனின் சார்ஜரைக் கொண்டு சார்ஜ் போடாமல், பிறரின் செல்போன் சார்ஜர்களை பயன்படுத்துவது, சார்ஜ் போட்டுக் கொண்டே மொபைலில் பேசுவது, இண்டர்நெட்டை இயக்கிக் கொண்டே ஃபோனில் பேசுவது உள்ளிட்ட காரணங்களால் மொபைல் ஃபோன் வெகு விரைவில் சூடாகி வெடிக்கும் நிலைக்கு தூண்டப்படுகிறது. என்கிறார்கள்.

மொபைல் ஃபோன் என்பது இன்று நமக்கு தவிர்க்க முடியாத சாதனங்களில் ஒன்றாகி விட்டது. அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையைப் பலர் அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அது வரமா? சாபமா என்பதை கவனமாக முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எந்த ஒரு சாதனத்தையும் அதன் தேவைக்காக மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். அதன் மாயையில்

சிக்கி பெரும்பாலான நேரங்களை அதில் தொலைத்தால் இப்படித்தான் சில சமயங்களில் அன்பிற்குரியவர்களை இழந்து விட்டு கதறும் நிலை ஏற்பட்டு விடும்.

logo
Kalki Online
kalkionline.com