

இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் இந்த வேண்டுகோளை முன்வைத்தது மக்களிடையே கவனம் பெற்று வருகிறது.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.21.50 கோடி மதிப்பில் திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்ததுடன் அந்த புதிய திருமண மாளிகையில் 10 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் திருமணம் செய்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று திருமணமான ஜோடிகளுக்கு அறிவுரையும் வழங்கினார்.
இதுகுறித்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,"திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் போதெல்லாம் சென்னைக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வரும். இன்றைக்கு சென்னையில் இருக்கும் மேம்பாலங்களைப் பார்த்தாலே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவை சுரங்கப்பாதைகளாக இருந்தாலும் சரி, பூங்காக்களாக இருந்தாலும் சரி, ஏன் மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும் சரி... அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டவைதான்." என அரசின் நலத்திட்டங்களை விவரித்துப் பேசியபின் திருமணமான புதிய தம்பதிகளைப் பார்த்து இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
"இந்த திருமண மண்டபத்தில், 10 ஜோடிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்தை காணக்கூடிய மணமக்களுக்கு, நான் எந்த அறிவுரையும் சொல்ல தேவையில்லை. இப்போது ஒரே ஒரு அறிவுரை மட்டும் சொல்கிறேன். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; யாரையும் விமர்சனம் செய்து பேசவில்லை; யாரையும் கொச்சைப்படுத்திப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். ஆங்கிலத்தில், வடமொழியில் பெயர் வைப்பதெல்லாம் பார்க்கிறோம்; இதை சொல்லும் போது, என்னுடைய பெயரும் ஸ்டாலின் – அது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் என்னுடைய பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு – அது உங்களுக்கு எல்லாம் தெரியும். ரஷ்யாவில் புரட்சியாளர் ஸ்டாலின் நினைவில் கொண்டு கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீது தலைவர் கலைஞர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில், அவர் இறந்த நேரத்தில், நான் பிறந்த காரணத்தால் அந்த பெயரை எனக்கு சூட்டி, தலைவர் கலைஞர் மகிழ்ந்தாரே தவிர, வேறு எதுவும் கிடையாது. அதனால் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் – மணமக்களுக்கு மட்டுமல்ல; இனி வரக்கூடிய காலக்கட்டத்தில், பேரன், பேத்திகளை எல்லாம் நீங்கள் எடுக்கப் போகிறீர்கள் – அந்தக் குழந்தைகளுக்கும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; சூட்டுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று, பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்" என்று பேசி கரகோஷங்களைப் பெற்றார்.
தமிழ் அடையாளம், மொழி மரியாதை, பண்பாட்டு பெருமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி “குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்க வேண்டும்” என்று இதற்கு முன் வெளிப்படையாக வலியுறுத்திய முக்கிய தலைவர்கள் பலருண்டு. அவர்களுள் "பெயரே மனிதனின் சுயமரியாதை" என்று அறிவுறுத்திய தமிழ்ப் பெயர் இயக்கத்தின் முன்னோடியான தந்தை பெரியார் ஈ.வி. ராமசாமி, “தமிழில் பெயர் – தமிழில் சிந்தனை” என்ற கருத்துடன் பேரறிஞர் அண்ணா , தன் குடும்பத்திலும் தூய தமிழ்ப் பெயர்களை வைத்து, அரசு விழாக்கள், எழுத்துகள், பேச்சுகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கலைஞர் , “பெயரிலும் மொழித் தூய்மை வேண்டும்” என்ற தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை என போற்றப்படும் மறைமலை அடிகள், குழந்தைகளுக்கு அழகான, அர்த்தமுள்ள தமிழ்ப் பெயர்கள் வேண்டும் என வலியுறுத்திய தமிழ்க் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என தமிழ்ப் பெயர்கள் வைக்க வேண்டிய தலைவர்கள் வரிசையில் தற்போது ஸ்டாலினும் இணைகிறார்.
தாய் மொழிக்கு அடையாளமாகும் அர்த்தமுள்ள தமிழ்ப் பெயர்களை எதிர்காலத்தில் நாம் இனி கேட்க முடியும்.