

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தில் கந்தாட் மற்றும் இண்ட்ரோலி போன்ற கிராமங்களில், பெண்கள் மூன்று தங்க நகைகளுக்கு மேல் அணிந்தால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறையின் நோக்கம் ஆடம்பரத்தை கட்டுப்படுத்துவதும், பொருளாதார சமத்துவமின்மையை குறைப்பதுமாகும். காதணி, மூக்குத்தி மற்றும் மங்கள சூத்திரம் போன்ற மூன்று தங்க நகைகளை மட்டுமே இங்கு பெண்கள் அணிய அனுமதிக்கப்படுகிறார்கள். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக நடுத்தர குடும்பங்களில் தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாகி வருகிறது. இப்படி நகை வாங்க முடியாமல் இருப்பவர்களின் சங்கடத்தை தீர்த்து வைப்பது போல் உத்தரகாண்டில் உள்ள கிராமத்தில் வித்தியாசமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் வெளியில் வரும் பொழுது குறைவான நகைகள் அணிய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜான்சர்-பவார் பகுதியில் உள்ள கந்தாட் என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தான் பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் பெண்கள் காதில் கம்மல், மூக்குத்தி, தாலி போன்றவற்றை மட்டுமே அணியலாம். மற்றபடி ஆடம்பரமான நகைகள் அணியக்கூடாது. மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கிராம தலைவர்கள் அதிரடியாக அறிவித்தனர்.
திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஏழை எளிய மக்கள் கடன் வாங்கி செலவு செய்யும் நிலையில் உள்ளது. ஆடம்பர செலவு செய்து, தங்க நகைகளை போட்டுக் கொண்டு தங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவது போன்றவற்றை தடுக்கவும், ஆடம்பர கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமத் தலைவர்கள் கூறுகின்றனர். இந்த முடிவை கிராம மக்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர்.
சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருவதற்கு இது போன்ற கட்டுப்பாடுகள் அவசியம் என்றும், இதனை மதித்து நடந்தால் சமூகத்தில் சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த முடிவானது பலருடைய கவனத்தையும் பெற்று வருவதுடன், இது தொடர்பான விவாதங்களும் சோஷியல் மீடியாக்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
பெண்கள் நிறைய நகை அணிந்து வருவதால் சாமானிய வீட்டுப் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும், இது சமூகத்தில் ஒருவித அழுத்தத்தை கொடுப்பதாகவும் உணர்ந்ததால் கிராமத்தில் அனைவரையும் சமமாக நடத்தும் வகையில் தங்க நகைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கிராம மக்கள் இடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்தபடியாக மதுவிற்கும் இதுபோன்ற தடையை விதிக்க வேண்டும் என்று கிராம மக்கள் குரல் உயர்த்தி வருகிறார்கள்.
வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தானே!