

மனிதர்கள், தாம் சிறப்புற்று வாழப் பின்பற்ற வேண்டிய அத்தனை வழி முறைகளையும் அவற்றின் கதாபாத்திரங்கள் மூலம் சொல்லிக் கொடுக்கின்றன நம் இதிகாசங்கள்!
ராமனாக, தருமனாக வாழ்ந்தால் ஏற்படும் மதிப்பையும், ராவணனாக, துரியோதனனாகச் செயல்பட்டால் வரும் இழப்பையும் அனுபவ ரீதியாக உணர்த்துகின்றன!
‘தம்பியுடையான் படைக்கஞ்சான்!’ என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அண்ணன்கள் நீதி தவறும்போது, தம்பிகள் இருந்தாலும் பயன் ஏற்படாது என்பதும் விளக்கப்பட்டுள்ளது!
கொடை வள்ளல் கர்ணனும், அதி தூக்கக் கும்பகர்ணனும் அசகாய சூரர்கள் என்றாலும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்த காரணத்தால் முன்னவர் வஞ்சகமாகவும், பின்னவர் போர்க்களத்திலும் இன்னுயிர் ஈந்தார்கள்!
கும்பகர்ணன் இந்திரனிடம் வரத்தைத் தவறுதலாகக் கேட்டதாலேயே நெடிய தூக்கத்திற்கு ஆளானதாக வரலாறு கூறுகிறது!
இப்பொழுது, வானரப்படையுடன் ராமர் இலங்கையை நெருங்கும் தருணம்! ஒற்றை வானரமான அனுமனே அசோக வனத்தைச் சூறையாடி, இலங்கையைத் தீக்கிரை யாக்கி, சொல்லவொண்ணாத் துயருக்கு ஆளாக்கி விட்ட வேளை!
அடுத்தவன் பெண்டாட்டியை வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து வம்பை விலைக்கு வாங்கும் அண்ணன்! தூக்கத்திலிருக்கும் கும்பகர்ணன் எழுப்பப்படுகிறான்! குன்றினும் உயர்ந்த தோள்களை உடையவனாம் கும்பகர்ணன்! ஏவலாட்கள் எழுப்புகிறார்கள் அவனை!
உறங்குகின்ற கும்ப கன்ன உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது! இன்று காண்! எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய்! உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்!
எழும்புகிறான்; இயற்கைக் கடன்களை முடிக்கிறான்; சாப்பிடுகிறான்!
ஆறு நூறு சகடத்து அடிசலும் நூறு நூறு குடங்களும் நுங்கினான்!
ஏறுகின்ற பசியை எழுப்பினான்!…….
எவ்வளவு உள்ளே தள்ளினாலும் அடங்காத பசி! ஓரளவு சாப்பிட்டதும் அண்ணனைச் சந்திக்கிறான்!
ராவணன் சொல்கிறான்...
'வானரப்படை, மானிடப்படை யென்று இலங்கை எதிரிகளால் சூழப்பட்டுள்ளது. நீ விரைந்து போய் விரட்டிடு அவர்களை!' என்று.
உடனே கேட்கிறான் கும்பகர்ணன் - என்றும் எதிர்த்துப் பேசாத அண்ணன் ராவணனைப் பார்த்து...
ஆனதோ வெஞ்சமம்! அலகில் கற்புடைச் சானகி துயர்
இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ?
புகுந்ததோ பொன்றும் காலமே!
'ஜானகி துயர் இன்னும் தணியாத காரணத்தால் போர் மூண்டதோ? உலகமே புகழும் வானுயர்ந்த நம் பெருமைக்கு முடிவு வந்ததோ?' என்றவனிடம் ராவணன் கோப முகத்தைக் காட்ட, உடன் போருக்குப் புறப்படுகிறான் கும்பகர்ணன்!
கூடவே பெரும்படையையும் அனுப்புகிறான் ராவணன்!
களம் புகுந்த கும்பகர்ணன் குரங்குப் படையை வேட்டையாடுகிறான்!
அங்கதனும், அனுமாரும் கூட எதிர்த்து நிற்க முடியாமல் தடுமாறுகின்றனர்!
இலக்குவன் தாக்குப் பிடிக்க முடியாமல் திணற, அனுமன் தோள் மீது ஏறித் தாக்கியும் கும்பகர்ணனை எதிர்த்து நிற்க முடியவில்லை அவனால்!
இதனைக் கண்ட சுக்ரீவன் ஓடி வந்து உதவ முன் வர, கும்பகர்ணன் அடித்த அடியில் அவன் சுய நினைவிழக்கிறான்! உணர்விழந்த அவனை கும்பகர்ணன் எடுத்துச் செல்ல முயல, ராமர் வழியை மறிக்கிறார்! ராமரின் அம்பு கும்பகர்ணனைப் பதம் பார்க்க, கொட்டிய குருதியில் சுக்ரீவன் மயக்கம் தெளிய, கும்பகர்ணனின் மூக்கையும், காதுகளையும் கடித்து அவனை மூளியாக்குகிறான்!
கும்ப கருணா! நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்
நின் உயிர் நினக்கு ஈவன்!
போதியோ? பின்றை வருதியோ?
என்று கேட்கிறார் ராமர்!
அதனைக் கருத்தில் கொள்ளாது அவன் மேலும் போரிட, கை, கால்களை இழக்கிறான்! அவற்றை இழந்த நிலையிலும் ராமனைப் புகழ்கிறான்!
'அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர்!' என்கிறான்!
அத்தோடு, தான் இறந்த பிறகுங்கூட தன் தம்பி விபீடணன் அனாதையாகி விடக் கூடாது என்று ராமரிடம் வேண்டுகிறான்!
உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான்
ஒருபொழுதும் எம்பி பிரியானாக அருளி
என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறான்!
இறுதியாக ராமரிடம் வேண்டுகிறான்!
மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை நுன்கணையால் என்கழுத்தை
நீக்குவாய்! நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள்!
அவன் வேண்டுகோளை ராமர் அப்படியே நிறைவேற்றுகிறார்!
தவறிழைத்த அண்ணனுக்காய் தன் இன்னுயிர் ஈந்த அதி தூக்க கும்பகர்ணன், நம் கண்களைக் குளமாக்கி, நம் உறக்கத்தைக் கெடுப்பது உண்மைதானே?