

அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க கூட்டுறவு வங்கிகளின் தங்க நகை அடமான கடன் தொகையை கிராம் தங்கத்திற்கு அதிகபட்சம், 10,000 ரூபாய் வழங்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், தற்போது ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ. 9,000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ. 10,000 வரை நகைக்கடன் வழங்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படவுள்ளதாம். இதனால் பயனாளிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கவுள்ளது.
தங்கத்தின் விலையில் ஏற்ற-இறக்கம் இருந்தாலும், தங்கத்துக்கான தேவை இருந்து கொண்டே உள்ளது. காரணம், தங்கத்தை தேவைப்படும் நேரங்களில் பணமாக மாற்றி பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அவசர பணத்தேவைகளுக்கு வங்கிகளில் தங்கத்திற்கு ஈடாக கடன் பெற முடியும். அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரங்களில் உதவுவதற்காகவே வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறை உள்ளது.
அதேபோல் தங்க நடைக்கடன் வாங்குவதற்கு ஆவணங்களே, அதிக நடைமுறைகளோ தேவையில்லை என்பதால் தங்க நகைக்கடனை வாங்கவே அதிகளவு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மற்ற கடன்களை விடவும் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் மிக மிக குறைவு. இதனால் தான், தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கடன் எளிதாகவும், வேகமாகவும் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்க வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் தங்க நகை அடமானத்தின் பேரில் கடனுதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 22,793 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவுச் சங்க பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டும் 10,368 சங்கங்கள் உள்ளன. 1 மாநில தலைமை கூட்டுறவு வங்கி உள்ளது. தமிழகத்தில் 23 மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ரூ.10 கோடி முதல் ரூ.300 கோடி பரிவர்த்தனை அளவில் 126 நகர கூட்டுறவு வங்கிகள் தனித்தனியாக செயல்படுகின்றன.
தேசிய கூட்டுறவு வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் அனைத்து விதிகள் நகர, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். அந்தவகையில் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்கத்திற்கு கடன் வழங்கப்படுகிறது.
ஆனாலும் தனியார் வங்கிகளை விட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மிகவும் குறைவாக கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதனால் தங்கத்தின் விலை ஏறினாலும் கூட்டுறவு வங்கியில் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படுவதால் சமீபகாலமாக பலரும் தனியார் வங்கிகளில் நகை கடன் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ஏற்கனவே 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகையை அடமானம் வைத்தால், கிராமுக்கு தற்போது அதிகபட்சமாக, ரூ.9,000 மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் தங்களது தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைத்து அதிகளவில் கடன் பெறுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்ட கூட்டுறவு வங்கிகளில், தற்போது ஒரு கிராமுக்கு 9000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதிகரித்து வரும் தங்கத்திற்கு ஈடாக தங்க நகைக்கடன் தொகையை அதிகரிக்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
இதனால், ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ. 10,000 வரை நகைக்கடன் வழங்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களை கூட்டுறவு வங்கிகளை நோக்கி ஈர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, வரும் வாரம் நடைபெற உள்ள கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் இதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டு, நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பால் நகை கடன் வாங்குவோர் குஷியாகி உள்ளனர். ஏனெனில் கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகையை அதிகரித்தால் மக்கள் அவசரக் குடும்பச் செலவுகளுக்கு பணம் தேவைப்படும் போது குறைந்த எடையுள்ள நகைகளை அடமானம் வைத்தே அதிக கடனை பெறமுடியும்.
கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்படும் நகைக்கடன் தொகை போதவில்லை என்பதால்தான் பெரும்பாலான மக்கள் வட்டி அதிகம் என்றாலும் தங்களுடைய அவசர தேவைக்காக தனியார் அடகு கடைகள், கந்து வட்டிக்காரர்களை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் அதிக நகைக்கடனுக்கு அதிக தொகை கிடைத்தால் அவர்கள் கந்து வட்டியால் பாதிக்கும் நிலை ஏற்படாது.