

ஏழை எளிய மக்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரங்களில் உதவுவதற்காகவே வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறை உள்ளது. அந்த வகையில் நகைக் கடன் (Gold Loan) என்பது உங்கள் தங்க நகைகளை அடகு வைத்து, அவசர நிதித் தேவைகளுக்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து விரைவாகப் பெறப்படும் பாதுகாப்பான கடனாகும்.
பெரும்பாலான மக்கள் தங்களுடைய திடீர் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நகைகளை வைத்து கடன் வாங்குகின்றனர். நகைக் கடன் என்பது மிக எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கும் கடன் ஆகும். நம்மிடம் இருக்கும் நகையை அடகு வைத்து விட்டு அதன் மதிப்புக்கு ஏற்ப அப்போதைய வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். வங்கிகள் மட்டுமல்லாமல், நிதி நிறுவனங்களும் நகைக் கடனை வழங்குகின்றன. பல நேரங்களில் மக்கள் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்பதற்காக நகைகளை அடமானம் வைக்கின்றனர்.
அதேபோல் தங்க நடைக்கடன் வாங்குவதற்கு ஆவணங்களே, அதிக நடைமுறைகளோ தேவையில்லை என்பதால் தங்க நகைக்கடனை வாங்கவே அதிகளவு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மற்ற கடன்களை விடவும் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் தான் மிக மிக குறைவு.
அப்படி மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் வாங்கும்போது, இந்தத் தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கு வந்தால் அதுகுறித்து வருமான வரித்துறை கேள்வி கேட்குமா? அல்லது இதற்கு வரி கட்ட வேண்டுமா? என்ற பீதி பலருக்கும் உள்ளது. நகைக் கடன் மற்றும் வருமான வரி தொடர்பாகச் சாதாரண மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தெளிவான விளக்கங்கள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம் வாங்க.
இங்கே மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களிடம் உள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து வாங்கும் நகைக் கடன் தொகை உங்களின் வருமானமாக கருதப்படாது. பொதுவாக, ஒருவர் சம்பளம் மூலமாகவோ, தொழில் மூலமாகவோ அல்லது சொத்துக்களை விற்பதன் மூலமாகவோ ஈட்டும் பணத்திற்குத்தான் வருமான வரித்துறையால் வரி விதிக்கப்படும்.
பொதுவாக நகைக்கடன் வாங்குவதற்கு நேரடி வரி (Income Tax) கிடையாது. இது உங்கள் சொத்தின் மீதான கடன் (Loan against asset) என்பதால், வாங்கிய தொகை வருமானமாகக் கருதப்படாது.
இருப்பினும், பெருந்தொகை (எ.கா., ₹10 லட்சத்திற்கு மேல்) கடன் பெறும்போது, வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆளாக நேரிடலாம் என்பதால், சரியான ஆவணங்களைப் பராமரிப்பது அவசியம்.
ஆனால், நகைக் கடன் என்பது உங்களிடம் உள்ள தங்கத்தை அடமானமாக வைத்துத் தற்காலிகமாகப் பெறும் ஒரு கடன் மட்டுமே என்பதால் இது உங்களுக்கு வருமானம் கிடையாது. அதனால் நகைக் கடன் வாங்கும் தொகைக்கு நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல் வருமான வரித்துறையும் இத்தொகையை உங்கள் ஆண்டு வருமானத்துடன் சேர்த்துக் கணக்கிடாது.
அதேபோல் நீங்கள் வங்கியில் கடன் வாங்கினால் அதற்குக் கட்டும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்குமா என்று கேட்டால், அதற்கு அந்த பணத்தை நீங்கள் எதற்காக பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்தது தான் வரி விதிக்கப்படும். அதாவது, நீங்கள் வாங்கிய நகைக் கடனை உங்களது சொந்தத் தேவைக்காகவோ அதாவது வீட்டு விசேஷங்கள், மருத்துவ செலவுகள் அல்லது கல்விச் செலவுகளுக்காக பயன்படுத்தினால், நீங்கள் செலுத்தும் வட்டிக்கு எந்தவிதமான வரிச் சலுகையும் அல்லது விலக்கும் பெற முடியாது.
ஆனால், அதுவே அந்த நகைக் கடனை வாங்கி, அந்த பணத்தை உங்கள் பிசினஸ் வளர்ச்சிக்காக முதலீடு செய்தால், அதற்குச் செலுத்தும் வட்டித் தொகையை உங்கள் வியாபாரச் செலவாக காட்ட முடியும். இதன் மூலம் உங்கள் லாபத்தில் இருந்து வட்டி தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள லாபத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது.
அதாவது, தொழில் பயன்பாட்டிற்கு மட்டுமே வட்டி கழிவு என்ற சலுகை பொருந்தும்.
ஆனால் நீங்கள் அடகு வைக்கும் நகை உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு வாங்கியதாக இருக்கும்பட்சத்தில் வருமான வரித்துறையால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
உதாரணத்திற்கு, உங்கள் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய் என்று கணக்குக் காட்டிவிட்டு, திடீரென 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கினால், அந்தத் தங்கம் உங்களுக்கு எப்படி வந்தது? என்ற கேள்வியை வருமான வரித்துறை உங்களிடம் எழுப்ப வாய்ப்புள்ளது. அதனால் முறையான வருமானத்தில் வாங்கப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவதில் எந்தச் சிக்கலும் வருவதற்கு வாய்ப்பில்லை.
அதேபோல், பெரிய தொகையைக் கடனாகப் பெறும்போது, அதை ரொக்கமாக வாங்காமல் உங்கள் வங்கிக் கணக்கின் மூலமாகப் பெறும் போது (Bank Transfer) வருங்காலத்தில் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பாதுகாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் அவசரத் தேவைக்காக வாங்கும் நகைக் கடன் உங்களின் வரிப் பொறுப்பை அதிகரிக்காது. ஆனால், அந்தப் பணத்தை நீங்கள் எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே வட்டிச் சலுகைகள் அமையும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.