

நம் இந்தியாவில் குழந்தைகளை கொஞ்சும் போதே தங்கமே என்று தான் சொல்கிறோம். அந்த வகையில் தங்கத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெண்களை சொல்லவே வேண்டியதில்லை. தங்கத்தின் மீது அவர்களுக்கு எப்போதும் தீராத மோகம் உண்டு. பாரம்பரியம், கலாச்சாரம், கௌரவத்தின் அடையாளமாகவும், பெண்களின் அழகு பொருளாகவும் இருந்த தங்கத்தின் விலை தற்போது எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டது. ஏழைகள், நடுத்தர மக்கள் கனவில் மட்டும் தங்கத்தை நினைத்து பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் தங்கத்தை வாங்கி விற்கும் வியாபாரிகள் மட்டும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
எனது தாயார் சிறுவயதாக இருந்தபோது, ஒரு பவுன் தங்க நகையை ரூ.300-க்கு வாங்கிவிடலாம் எனக்கூற கேட்டது உண்டு. எனக்கு விவரம் அறிய 1 பவுன் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன்பின்பு அவ்வப்போது விலை உயர்ந்து வந்தது.
ஆனால் இன்று தங்கத்தின் விலை காலையும், மாலையும் என 2 முறை அதிகரித்து வருகிறது. இப்போது ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி விட்டது. செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி.யை சேர்த்தால் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டிவிட்டது.
கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து ஒரு பவுன் தங்கம் விரைவில் ரூ.1 லட்சத்துக்கு சென்று விடும் போல தெரிகிறது. இது தவிர, செய்கூலி, சேதாரம் என நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. ஏழை, நடுத்தர மக்கள் தங்களுடைய மகள்களுக்கு தாங்கள் சிறுக, சிறுக சேமித்த பணத்தில் தங்க நகைகள் வாங்கி திருமணத்தை நடத்தி வந்தனர். ஆனால் தற்போது ஏழை, நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.
இப்படியே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போனால், வரும் நாட்களில் திருமணத்தின் போது பெண் பிள்ளைகளுக்கு தங்கத்திற்கு பதிலாக கவரிங் நகைகளை தான் போட்டு கட்டிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்க நகைகள் வாங்க முடியாத பெண்களின் கவனம் தற்போது குறைந்த விலையில் தங்கம் போல தோற்றமளிக்கும் நகைகளை வாங்க விரும்புகின்றனர். ஏனெனில் இந்தியாவில் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு தங்கம் நகை அணிந்து சென்றால் தான் கௌரவம் என்று பார்க்கப்படுவதால் பெண்களின் கவனம் இந்த நகைகளில் பக்கம் திரும்பி உள்ளது.
அந்த வகையில், நீண்ட காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ‘1 கிராம் தங்க நகைகள்’ தற்போது மீண்டும் அதிகளவில் விற்பனையாக தொடங்கி உள்ளது. இருப்பினும் இது உண்மையான தங்கம் கிடையாது. ஒரு கிராம் தங்க நகை என்பது செம்பு, பித்தளை மற்றும் பிற உலோகங்களால் செய்யப்பட்ட நகையாகும். இந்த நகைகள் எலக்ட்ரோபிளேட்டிங் அல்லது தங்க படலம் அடுக்கு மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதை சில கவரிங் நகைக்கடைகளில் விற்பனை செய்கிறார்கள். ஒரு கிராம் மட்டுமில்லாமல், அரை, கால் கிராமிலும் கிடைக்கிறது. இந்த நகைகளை அணியும் போது, உண்மையான தங்க நகைகளை அணிந்துள்ளதை போன்றே தெரியும். யாரும் போலி என்று சொல்ல முடியாது. அதுமட்டுமின்றி கவரிங் நகைகளை அணிவது போன்று கழுத்தில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வருவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஒரு கிராம் தங்க நகையை வெளியில் போகும் போது மட்டும் அணிந்து கொண்டால் 5, 6 வருடங்கள் கூட புதுசு போல் இருப்பதாக வாங்கியவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் தினமும் இந்த நகைகளை அணிந்து கொண்டால் 2 வருடங்கள் வரை கறுக்காமல் இருப்பதாக கூறுகின்றனர். வெயில் காலத்தில் இந்த நகையை தினமும் அணிந்ததால் விரைவில் கறுத்து விடும் என்றும் எச்சரிக்கின்றனர். அதாவது, இந்த நகைகளை தினமும் பயன்படுத்த முடியாது.
தினமும் பயன்படுத்தினால், அது தேய்ந்து போக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதுபோல் இந்த ஒரு கிராம் நகையை உபயோகப்படுத்தி விட்டு மறுபடியும் வாங்கிய கடையிலேயே திரும்ப கொடுத்தால் வாங்கும் போது கொடுத்த விலையில் பாதியை தருவதாகவும் கூறுகின்றனர். ஆகையால், அதை வாங்கும்போது கடைக்காரரிடம் தெளிவாக கேட்டு வாங்குவது நல்லது.
கவரிங் நகைகள் இரண்டு, மூன்று முறைக்கு மேல் உபயோகப்படுத்திய பின்னர் கறுத்து விடுவதால் பெண்கள் ஒரு கிராம் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் அதேசமயம் ஆன்லைனில் இந்த 1 கிராம் தங்க நகைகள், வெறும் ரூ.80 முதல் ரூ.500 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஆன்லைனில் வாங்கப்படும் நகைகளுக்கு ரீசேல் மதிப்பு கிடையாது.
இந்த ஒரு கிராம் தங்க நகைகளின் விலை மலிவாக உள்ளதால், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பெரும்பாலான பெண்கள் இதையே அணிந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வரும் நிலையில், அதற்கு மாற்றாக இந்த ஒரு கிராம் தங்க நகைகள் பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் தங்கத்தின் விலை உயர, உயர அதை அணிந்து செல்லும் பெண்களின் பாதுகாப்பும் கேள்வி குறியாகிவிட்டது. வழிப்பறி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. தங்கத்திற்கு மாற்றாக ஒரு கிராம் தங்க நகையின் விலை குறைவாக இருப்பதால், திருடு போனாலும் கவலை இல்லை.