
தங்கத்தின் அசாத்திய விலை ஏற்றத்தினால் தங்கத்தின் மீது இருந்த ஆசை பெண்கள் பெரும்பாலோருக்கு இல்லாமல் போய்விட்டது எனலாம். அதுமட்டுமின்றி தங்கம் அணிந்து சென்றால் அதை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தாலும் பலரும் தங்கத்தை அணிந்து தைரியமாக வெளியில் செல்வதில்லை.
இந்த நேரங்களில் கை தருவது தங்கம் போன்றே மின்னும் கவரிங் நகைகள்தான். அசலான தங்கத்துக்கு நிகரான போலி தங்க நகையாக தற்போது அனைவராலும் விரும்பப்பட்டு வருகிறது கவரிங் நகைகள். முன்பெல்லாம் கவரிங் நகை எந்த சென்றால் அந்தஸ்து பேதம் பார்த்தவர்கள் உண்டு.
ஆனால் தற்போது எத்தனை தங்க நகைகள் இருந்தாலும் அவற்றை லாக்கரில் வைத்துவிட்டு உடைகளுக்கு மேட்ச்சாக கவரிங் நகைகளை அணிந்து செல்வது பெண்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. காரணம் தங்கத்தை விடவும் அதீத வேலைப்பாடுகள் அத்துடன் அணியும் ஆடைகளுக்கு தகுந்த நிறத்திலும் கற்கள் பதிக்கப்பட்டு தகுந்த விலையில் விற்கப்படுகிறது.
அக்காலத்தில் தங்கத்தை கண்டுபிடிப்பதற்கு முன் மண்ணில் செய்த நகைகளும், வெள்ளியில் செய்த ஆபரணங்களும் அதிகம் அணிந்து இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. தற்போது தங்கத்தின் விலை ஏற்றம் காரணமாக மீண்டும் வெள்ளியில் நகைகள் செய்வதும் சுடு மண்ணில் டெரகோட்டா வகை நகைகள் செய்வதும் அதிகரித்து வருகிறது. இத்துடன் கவரிங் நகைகளும் போட்டி போட்டு விற்பனையாகிறது.
கவரிங் நகைகள் என்பது தங்க முலாம் பூசப்பட்ட உலோக நகைகள் ஆகும். தங்கத்தைப் போலவே தோற்றம் தரும் இவைகள் பெரும்பாலும் பித்தளை, வெண்கலம், துத்தநாகம் போன்ற உலோகங்களால் செய்யப் பட்டிருக்கும். இவற்றின் மீது தங்க முலாம் பூசப்படுவதே தங்க நிறத்தில் தோற்றமளிக்கக் காரணம்.
தங்க நகைகளுக்கு மாற்றாக பெண்களின் அழகுக்கு உதவும் இவைகள் அதிக விலையில்லாமல் கிடைப்பதால் அன்றாட நிகழ்ச்சிகள் முதல் பண்டிகைகள் மற்றும் மணப்பெண் திருமணம் வரை அணிய உகந்தவையாக உள்ளது.
பல்வேறு டிசைன்களில், மாடல்களில் ஆன்லைன் முதல் பக்கத்து தெரு ஃபேன்சி ஸ்டோரிலும் கிடைக்கும் கவரிங் நகைகளை சரியான முறையில் பராமரித்தால் கூடுதல் காலம் உபயோகிக்கலாம்.
கவரிங் நகைகளை சுத்தமாக வைத்திருக்க, சாதாரண சோப்பு, தண்ணீர் மற்றும் மென்மையான துணியைப் பயன்படுத்தவேண்டும். அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் வைக்காமல், உலர்ந்த இடத்தில் வைக்கவும். நகைகள் மீது நேரடியாக வாசனை திரவியங்கள் தெளிப்பதைத் தவிர்க்கவும். பயன்பாட்டிற்குப் பிறகு படிந்த வியர்வையை அகற்ற மென்மையான துணியால் துடைத்து காற்றுப்புகாத டப்பா அல்லது ஜிப்லாக் கவரில் வைக்கவும்.
கவரிங் என்றாலும் தங்கம் போலவே அதுவும் மின்னும் தன்மை கொண்டது என்பதால் அசால்டாக அதை வெளியில் தெரியும்படி போட்டுச் செல்வது பெண்களுக்கு ஆபத்து தரும். காரணம் திருடர்கள் அறிவதில்லை அந்த நகை கவரிங் நகைதான் என்று.
மேலும் கவரிங் நகை ஒரு சிலருக்கு ஒவ்வாமையை தந்து தோள்களில் அரிப்பு மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் கவனமாக இருக்கவேண்டும். கவரிங் நகை போட்டு சருமத்தில் அலர்ஜி வந்தால் உடனடியாக கவரிங் நகையை கழற்றுவது நல்லது. மேலும் அதை அணியாமல் தவிர்ப்பதும் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறுவதும் முக்கியம்.
இதில் சரும அலர்ஜியை உண்டு பண்ணாத வகையில் ஐம்பொன் நகைகள் எனப்படும் நகைகளுக்கு தனி கிராக்கி உண்டு. அதேபோல் சிறிதே சிறிதளவு தங்கம் கலந்து செய்யப்படும் ஒன் கிராம் கோல்டு எனப்படும் கவரிங் நகைகளுக்கும் பெண்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
தங்கத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்ற கவலையின்றி தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு இதுபோன்ற நகைகளை வாங்கி பெண்கள் தைரியமாக அணியலாம்.