ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்கை அழகுடன் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டமாக இருப்பது பன்ஸ்வாரா மாவட்டம். இங்கு அடிக்கடி தங்க வளம் கண்டுபிடிக்கப்படுவதால் செய்திகளில் அடிக்கடி இடம் பிடிகிறது. தற்போது மேலும் ஒரு புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த மாவட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள புதிய தங்கப் சுரங்கங்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. இது பன்ஸ்வாராவை நாட்டின் "தங்க மையமாக" விரைவில் மாற்றும்.
புதிய தங்க சுரங்கத்தின் கண்டுபிடிப்பு, உள்ளூர் பொருளாதாரம் மற்றும் தேசிய தங்க இருப்புகளில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்குகிறது.பன்ஸ்வாரா மாவட்டத்தின் கட்டோல் பகுதியில் உள்ள கங்காரியா கிராமத்தில் , மூன்றாவது தங்கச் சுரங்கத்தை கண்டுபிடித்துள்ளனர். புவியியலாளர்களின் ஆய்வுகளின்படி, கங்காரியா கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் தங்கத் தாது படிவுகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதற்கு முன் பன்ஸ்வாராவின் ஜக்பூரியா மற்றும் பூக்கியா ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கங்கள் முன்பே கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தற்போது கங்காரியாவிலும் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கம் வெட்டி எடுக்க சுரங்க உரிமங்கள் வழங்கப்பட்டவுடன் இந்தப் பகுதிகளில் பிரித்தெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. புவியியல் ஆய்வாளர்கள் மதிப்பின்படி இந்த முழுப்பகுதியிலும் காணப்படும் தங்கத் தாது படிவுகளின் அளவு பிரமிக்க வைக்கிறது.
இந்த பகுதியில் சுமார் 940.26 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒட்டுமொத்தப் பகுதியிலும் 113.52 மில்லியன் டன் தங்கத் தாதுக்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இந்த தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய தூய தங்கத்தின் மதிப்பு சுமார் 222.39 டன் ஆகும். கன்காரியா-காரா பகுதியில் மட்டும் 205 ஹெக்டேர் பரப்பளவில் 1.24 மில்லியன் டன் தங்கத் தாது இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.தங்கம் மட்டுமன்றி, இந்தச் சுரங்கத்தில் பல இணை தாதுக்களையும் பிரித்தெடுக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
சமீபத்தில் பூகியா-ஜக்புரா தங்க சுரங்கத்திற்கான முந்தைய டெண்டர் , ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் போதுமான நிதி ஆதாரங்களை சமர்பிக்காததால் ரத்து செய்யப்பட்டது.ஆயினும் ராஜஸ்தான் அரசு தற்போது இந்த சுரங்கத் தொகுதிகளுக்கான புதிய டெண்டர்களை மீண்டும் வெளியிட்டு, செயல்முறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த டெண்டர்களுக்கான காலக்கெடு அக்டோபர் 14ஆம் தேதியில் இருந்து நவம்பர் 3 ஆம் தேதிவரை உள்ளது.
புதிய டெண்டர்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் நிறுவனங்களுக்கே உரிமம் வழங்கப்பட உள்ளது.இந்தச் சுரங்கங்கள் முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், பன்ஸ்வாரா தங்கச் சுரங்கம் மற்றும் மற்ற தங்க சுரங்கத்தின் உற்பத்தியையும் சேர்த்தால் நாட்டின் ஓட்டுமொத்தத் தங்கத் தேவையில் சுமார் 25% ஐ வழங்கும் திறனைக் கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பன்ஸ்வாரா மாவட்டத்தில் , இந்த தங்கச் சுரங்கங்கள் அதன் பொருளாதார எதிர்காலத்திற்கான வாய்ப்புகளைத் திறக்கிறது. இது மின்னணுவியல், பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல்ஸ், பேட்டரிகள் மற்றும் ஏர் பேக்குகள் உள்ளிட்ட முக்கிய தொழில்களில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, மாவட்டத்தில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநிலத்தின் பொருளாதார வருவாயும் அதிகரிக்கும்.