

கின்னஸ் ரிகார்டில் ஒரு கோல்ட்ஃபிஷ் இடம் பெற்று சாதனை செய்து விட்டது? அதுவும் எதற்காக என்று தெரியுமா? ஒரு வண்டியை டிரைவ் செய்ததற்காக!
என்ன உளறல் என்று நினைக்க வேண்டாம். உண்மை தான் இது!
அந்த தங்கமீனின் பெயர் ப்ளப் (BLUB). அந்த இத்தாலிய மீனை வளர்ப்பவரின் பெயர் தாமஸ் டி உல்ப். (Thomas de Wolf). அவர் நெதர்லாந்தை சேர்ந்தவர்.
ஒரே ஒரு நிமிடத்தில் அதிகமான தூரத்தை நகர்தலை உணரும் ஒரு வண்டியை ஓட்டியதற்காக /டிரைவ் செய்ததற்காக -அதற்கு கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் சாதனை தரப்பட்டது.
தாமஸ் ஒரு கம்ப்யூட்டர் எஞ்ஜினியர், அவர் அமைத்திருக்கும் தனிச்சிறப்பைக் கொண்ட கார், ஒரு வாட்டர் டேங்கைக் கொண்டிருக்கிறது. அதற்குள் நீந்தும் தங்கமீனின் இயக்கங்களால் வண்டி நகர்கிறது. அது தனது இயக்கங்களால் ஒரு நிமிடத்தில் மலைக்க வைக்கும் 12.28 மீட்டர் – 40 அடி 3.46 அங்குலம்- தூரத்திற்கு வண்டியை நகர்த்தி இருக்கிறது. இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘லோ ஷோ டெய் ரிகார்ட்’ என்ற நிகழ்ச்சி மிலன் நகரில் நடந்தது. அதில் பங்கு பெற்ற தாமஸ், “எனது வேலை பொதுவாகவே ஒரு போர் அடிக்கும் வேலை. ஆகவே ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது சீரியஸான வேலையை விளையாட்டாக மாற்ற முயன்றேன்” என்றார்.
மோஷன் சென்ஸிங் கேமரா எனப்படும் நகர்தலை துல்லியமாக அறியும் கேமரா ஒன்று ப்ளப்பின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அது நீர்த்தொட்டியின் உள்ளே எந்த திசையில் நகர்கிறதோ அந்த திசையில் காரை நகர்த்த வழி வகுத்தது. இதனால் ப்ளப் தான் காரை டிரைவ் செய்கிறது என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது.
“இப்படிப்பட்ட தொழில்நுட்ப உத்தியால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இதை நான் வேடிக்கைக்காகச் செய்தேன்” என்றார் தாமஸ்.
என்றாலும் இந்த ஷோவை நிகழ்த்திய ஜெர்ரி ஸ்காட்டி (Gerry Scotti) இப்படிப்பட்ட நவீன தொழில்நுட்பமானது உடலில் குறை உள்ளவர்களுக்குப் பெருமளவில் உதவும் என்று குறிப்பிட்டார். “ஆமாம், ஆமாம். நகர முடியாதபடி உடல் இயக்கங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய என்னால் உதவ முடியும்” என்றார் தாமஸ்.
இந்த வண்டி பிரகாசமான சிவப்பு மீனால் மட்டுமே இயங்கும். ஏனெனில் அப்போது தான் கேமரா அதன் இயக்கங்களைப் பளிச்சென்று படம் பிடிக்க முடியும்.
இந்த வகையில் குட்டி ப்ளப் சிறந்த வகையில் இயங்கியதால் அதுவே இதை இயக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கின்னஸ் சாதனையில் பெயர் இடம் பெற வேண்டுமெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்க மீன் ஐந்து மீட்டர் தூரத்திற்கு வண்டியை இயக்க வேண்டும். வண்டி முன்னாலோ அல்லது பின்னாலோ எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம். ஆனால் ப்ளப் வெற்றிகரமாக 12 மீட்டர் ஓடி அனைவரையும் மலைக்க வைத்து விட்டது.
நிகழ்ச்சியாளர் ஸ்காட்டி இந்த நிகழ்ச்சியைக் காணும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் இனி எனக்கு டிரைவ் செய்யும் மீன் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கப் போகின்றன என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
ரிகார்ட் சர்டிபிகேட்டைப் பெற்ற தாமஸ், “அது சரி, உலக ரிகார்டை நீ படைத்து விட்டாய் என்று ப்ளப்புக்கு நான் எப்படி புரிய வைக்கப் போகிறேன்” என்று அங்கலாய்த்தார்.
நிகழ்ச்சியைக் கண்காணித்துத் தீர்ப்பை அளித்த சோபியா கிரீனாக்ரே, “சரியான தூரத்தை நிர்ணயிப்பதற்காக ஒவ்வொரு சக்கரத்திலும் உள்ள வண்ணக் குறி தரையைத் தொட்டதா என்று நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது” என்றார்.