பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கரும்பு விவசாயமும் கலைகட்ட ஆரம்பித்துவிடும். இந்த நேரத்தில், கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை. இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையுடன், தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. இந்த ஆண்டு, அதாவது 2024-25 அரவை பருவத்திற்கு, ஒரு டன் கரும்புக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
தமிழகத்தில் உள்ள 40 சர்க்கரை ஆலைகளும் முழுமையாக இயங்க வேண்டும்.
கரும்பு சாகுபடியை அதிகப்படுத்தி, சர்க்கரை உற்பத்தியை உயர்த்த வேண்டும்.
கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும்.
ஊக்கத்தொகை எவ்வாறு வழங்கப்படுகிறது?
இந்த சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதற்கு முன்பு, அரசு ஒரு பரிந்துரை விலையை அறிவிக்கும். ஆனால், இப்போது நேரடியாக விவசாயிகளுக்கு பணம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை ஒவ்வொரு வருடமும் உயர்த்தப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டில் ரூ.192.50 ஆக இருந்த தொகை, தற்போது ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2020-21 அரைவப் பருவம் டன் ஒன்றுக்கு ரூ.192.50
2021-22 அரைவப் பருவம் டன் ஒன்றுக்கு ரூ.195
2022-23 அரைவப் பருவம் டன் ஒன்றுக்கு ரூ.195
2023-24 அரைவப் பருவம் டன் ஒன்றுக்கு ரூ.215
2024-25 அரைவப் பருவம் டன் ஒன்றுக்கு ரூ.349
ஊக்கத்தொகை பெறுவது எப்படி?
1. கரும்பு விவசாயிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூட்டுறவு, தனியார் அல்லது அரசு சர்க்கரை ஆலைகளில் தங்கள் கரும்பை பதிவு செய்ய வேண்டும். ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விவரங்கள் தானாகவே சேகரிக்கப்பட்டு, அரசுத் துறையால் சரிபார்க்கப்படும் என்பதால் தனியாக எந்த விண்ணப்பமும் செய்யத் தேவையில்லை.
பிறகு, தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ஊக்கத்தொகை செலுத்தப்படும். இதற்கு ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவை.
இந்தத் திட்டம் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு பெரிய நிதி உதவியை வழங்குவதோடு, தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி மேலும் செழிக்கவும் உதவும்.