
-கல்பனா ராஜகோபால்
அதலக்காய் பார்பதற்கு மிகச் சிறியதாக இருக்கும். கசப்பான சுவையுடன் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது பொதுவாக மழைக்காலத்தில் கிடைக்கும் ஒரு பாரம்பரிய கொடி வகை காய்கறி ஆகும்.
அதலைக்காய் (அதலக்காய்) தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும். மற்றப்படி இப்போது அனைத்து super market களிலும் எளிதாக கிடைக்கிறது
அதலக்காய் புளிக்கூட்டு
தேவையான பொருட்கள்:
அதலக்காய் 200 கிராம்
புளி 150 கிராம்
நல்லெண்ணெய் 250 மில்லி
சின்ன வெங்காயம் 200 கிராம்
பூண்டு உரித்தது 100 கிராம்
பச்சை வேர்க்கடலை ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி தழை சிறிதளவு
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
குழம்பு மிளகாய் தூள் தேவைக்கு ஏற்ப
மஞ்சள்தூள் ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் 2 டீஸ்பூன்
வெந்தயப்பொடி ஒரு டீஸ்பூன்
வெல்லம் அல்லது கரும்பு சர்க்கரை சிறிது அளவு
கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தலா ஒரு டீஸ்பூன் தாளிப்பதற்கு
முதலில் சின்ன வெங்காயத்தையும் பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் கூழாக்கிக் கொள்ளவும்.
அதலக்காயை முனை நீக்கி சுத்தம் செய்து அதனை வேறு ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கி வைத்துக்கொள்ளவும். (அதலக்காய் வெடிக்கும் தன்மை கொண்டது எனவே கவனமாக வதக்க வேண்டும்)
புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான கடாயை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்த்து பொரிந்த பின் கறிவேப்பிலை சேர்த்து முதலில் பச்சை வேர்க்கடலையை போட்டு நன்கு கிளறி அதனுடன் முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக அதலக்காயை சேர்த்து நன்கு கலந்து பாதி அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும்போது அரைத்து வைத்துள்ள் தக்காளி கூழ் சேர்க்கவும் பிறகு கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள புளிக் கரைசலில் தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் சேர்த்து நன்கு கலந்து கடாயில் ஊற்றவும்.
புளிக்கரைசல் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
பிறகு அதனுடன் வெந்தயப் பொடி பெருங்காயத்தூள் மீதம் உள்ள நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும் எண்ணெய் பிரிந்து வரும் போது கிளறிவிட்டு அதில் தேவைக்கேற்ப உப்பு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
நன்றாக ஆறிய பின் ஒரு air tight container ல் போட்டு வைத்துக்கொள்ளலாம் ஊறுகாய் போலவே கெடாது ஒரு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம்.
இதனை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவார் மிர்தமாக இருக்கும். தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
அதலைக் காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
அதலக்காய் 200 கிராம்
பெரிய வெங்காயம் 2 No
பூண்டு உரித்தது 10 பல்
தக்காளி 2 No
கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் தேவையான அளவு
மிளகு ‘10 No
முந்திரி பருப்பு 10 No
உப்பு தேவைக்கேற்ப
மல்லித்தூள் ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
தேங்காய் எண்ணெய் 50 மில்லி
நெய் ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்கடலை 50 கிராம்
கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தலா இரண்டு டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
முதலில் அதலக்காயை முனை நீக்கி வைக்கவும். பெரிய வெங்காயம் பூண்டு தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரை ஸ்பூன் நெய் விட்டு வறுத்த வேர்க்கடலையையும் கறிவேப்பிலை சீரகம் மிளகு முந்திரி பருப்பு எல்லாவற்றை போட்டு மிதமான தீயில் கருகாமல் வறுத்து எடுத்து மிக்ஸியில் கொர கொரப்பாக பொடித்து வைக்கவும்.
மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும் பொரிந்தவுடன் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பூண்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் அதனுடன் தக்காளி சேர்த்து வதங்கியவுடன் அதலக்காயை சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும் அடிபிடிக்காமல் கவனமாக கிளறி மூடிவைக்கவும் சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை கிளறிவிடவும் தண்ணீர் விடாமல் ஆவியில் வதக்க வேண்டும் எண்ணெய் பிரிந்து வரும் போது அதனுடன் வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடியை தூவி மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்றாக கிளறி மல்லி தழை தூவி இறக்கவும்.
இதனை சாம்பார் சாதம் ரச சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். கசப்பு சுவை தெரியாமல் இருக்கும் குழந்தைகள் விரும்புவர்.