
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன. மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் (செப்டம்பர் 22-ம் தேதி) நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை சுமார் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் இன்று குறைய உள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்தும் முன் பொருளின் மீதுள்ள MRP விலையையும், பில்லையும் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, சிறிய கடைகளில் பழைய விலை வசூலிக்க வாய்ப்புள்ளது. கவனமாக இருந்தால், ஜிஎஸ்டி குறைப்பின் பலன் உங்கள் கையில் கிடைக்கும்.
ஏனெனில் இதற்கு முன்பு MRP மாற்றத்தை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும். ஆனால் இப்போது அந்த அவசியம் இல்லை. டீலர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் விலைப்பட்டியல் அனுப்பினால் போதும். பழைய பேக்கிங்கை 2026-ம் ஆண்டு மார்ச் வரை பயன்படுத்தலாம் என்பதால் மக்கள் கடையில் பொருள் வாங்கும் போது, MRP விலையை சரிபார்ப்பது நல்லது.
அந்த வகையில் இன்று முதல் விலை குறையவுள்ள பொருட்களின் விலையும், இதற்கு முன் அந்த பொருளின் விலையும், ஜி.எஸ்.டி. மாற்றத்தால் எவ்வளவு விலை குறைய உள்ளது என்பதை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள்
* 18 சதவீதம் இருந்த ரெடிமேட் பரோட்டா, 5 சதவீதத்தில் இருந்த சப்பாத்தி போன்ற உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கலாம்.
* பன்னீருக்கு முன்பிருந்த 5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோ பன்னீர் ரூ.300க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.15 வரை குறைந்து ரூ.258க்கு விற்கப்படும்.
* நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறைகிறது. உதாரணமாக ஒரு கிலோ நெய்-வெண்ணெய் ரூ.600 விற்பனை செய்யப்பட்டால் ரூ.40 வரை குறைந்து இனிமேல் ரூ.560க்கு விற்பனையாகும். 100 கிராம் வெண்ணெய் வாங்கினால் ரூ.4 வரை விலை குறையும்.
* 1 லிட்டர் மிக்ஸ்டுப்ரூட் ஜூஸ் விலை ரூ.8 வரை குறையும்.
* மூக்கு கண்ணாடிகள், லென்சுகள் 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதால் தோராயமாக ரூ.1,000 ஆக இருக்கும் மூக்கு கண்ணாடியின் விலை 25 சதவீதம் அளவுக்கு குறைந்து இனிமேல் ரூ.750 விற்பனை செய்யப்படும்.
* சோப்புகள், டூத் பேஸ்ட், ஷாம்புகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய்கள் இவற்றின் விலை 5 சதவீதமாக குறைந்ததுள்ளதால் ரூ.6.50-ல் இருந்து ரூ.40 வரை விலை குறைந்துள்ளது.
* சைக்கிள்கள் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக ஒரு சைக்கிளுக்கு விலைக்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை குறைந்து விட்டது.
MTR தயாரிப்புகளின் விலை குறைப்பு :
* எம்டிஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் (175 கிராம்) பாக்கெட் ரூ.145க்கு விற்கப்பட்ட நிலையில் 16 ரூபாய் குறைந்து இனிமேல் ரூ.129க்கு விற்கப்படும்.
* MTR ரவா இட்லி மிக்ஸ் 150 ரூபாயில் இருந்து 17 ரூபாய் குறைந்து 133 ரூபாய்க்கும், MTR பாதாம் டிரிங்க் மிக்ஸ் (200 கிராம்) 136 ரூபாயில் இருந்து 15 ரூபாய் குறைந்து 121 ரூபாய்க்கும், MTR 3 மினிட் போஹா (60 கிராம்) 30 ரூபாயில் இருந்து 3 ரூபாய் விலை குறைந்து 27 ரூபாய்க்கு விற்பனையாகும்.
அமுல் பொருட்களின் விலை குறைப்பு பட்டியல்:
பால், நெய், ஐஸ் கிரீம் உள்ளிட்ட 700 பொருட்களின் விலையை குறைக்க உள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், புதிய விலை பட்டியலின்படி ஒரு லிட்டர் நெய் விலை 40 ரூபாய் குறைக்கப்பட்டு 610 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீஸ் ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டு 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
* 99 ரூபாய்க்கு விற்பனையாகும் 200 கிராம் பன்னீர் இனி 95 ரூபாய்க்கும், 62 ரூபாய்க்கு விற்பனையாகும் 100 கிராம் வெண்ணெய் 58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
* அமுல் கோல்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ.69-இல் இருந்து ரூ.65 ஆகவும், மதர் டெய்ரி டோன்ட் பாலின் விலை ரூ.57-லிருந்து ரூ.54 ஆகவும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* அமுல் எருமை பால்: ஒரு லிட்டர் ரூ.75-லிருந்து ரூ.71 – ரூ.72 ஆகக் குறையும்.
* அமுல் பசுவின் பால்: ஒரு லிட்டர் ரூ.58-லிருந்து ரூ.55 – ரூ.57 ஆகக் குறையும்.
நந்தினி பால் பொருட்கள் விலை குறைப்பு :
மத்திய அரசு பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைத்துள்ளதால் கர்நாடக அரசின் நந்தினி பால் பொருட்களின் விலையும் இன்றுமுதல் குறைகிறது.
அதன்படி நந்தினி நெய் ஒரு லிட்டர் பை ரூ.650-ல் இருந்து ரூ.610 ஆக குறைக்கப்படுகிறது.
அதுபோல் வெண்ணெய் அரை லிட்டர் ரூ.305-ல் இருந்து ரூ.286 ஆகவும், பனீர் ஒரு கிலோ ரூ.425-ல் இருந்து ரூ.408 ஆகவும், பாலாடை கட்டி(சீஸ்) ஒரு கிலோ ரூ.480-ல் இருந்து ரூ.450 ஆகவும், பதப்படுத்தப்பட்ட பாலாடை கட்டி ஒரு கிலோ ரூ.530-ல் இருந்து ரூ.497 ஆகவும் குறைக்கப்படுகிறது.
மேலும் குட்லைப் பால் ஒரு லிட்டர் ரூ.70-ல் இருந்து ரூ.68 ஆகவும், ஐஸ்கிரீம்கள் வெண்ணிலா டப் ஒரு கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.178 ஆகவும், பேமிலி பேக் ஐஸ்கிரீம் 5 லிட்டர் ரூ.645-ல் இருந்து ரூ.574 ஆகவும், ஐஸ்கிரீம் சாக்லெட் சண்டே அரை லிட்டர் ரூ.115-ல் இருந்து ரூ.102 ஆகவும், ஐஸ்கிரீம் மேங்கோ நேச்சுரல் 100 கிராம் ரூ.35-ல் இருந்து ரூ.31 ஆகவும் குறைக்கப்படுகிறது.
Nestle தயாரிப்புகளின் விலை குறைப்பு :
* வெஜ் கோதுமை நுடுல்ஸ் பாக்கெட் 30 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும், மேகி நுடுல்ஸ் பாக்கெட் (600 கிராம்) 120 ரூபாயில் இருந்து 116 ரூபாயாகவும், மேகி தக்காளி சாஸ் 1 கிலோ 190 ரூபாயில் இருந்து 178 ரூபாயாக விலை குறைகிறது.
பேஸ்ட் பிரஷ் விலை :
* Colgate total (80G) 90 ரூபாயில் 80 ரூபாயாக விலை குறைந்துள்ளது.
* Colgate tooth powder 200 g : பழைய விலை ரூ.150 - புதிய விலை ரூ.140 (குறைவு ரூ.10)
* Colgate max fresh 150g :பழைய விலை ரூ.155 - புதிய விலை ரூ.138 (குறைவு ரூ.17)
* Colgate strong teeth 200g : பழைய விலை ரூ.149 - புதிய விலை ரூ.130 (குறைவு ரூ.19)
* Colgate active salt 200 g :பழைய விலை ரூ.166 - புதிய விலை ரூ.142 (குறைவு ரூ.24)
* Colgate Zig Zag toothbrush 6 pack :பழைய விலை ரூ.155 - புதிய விலை ரூ.138 (குறைவு ரூ.17)
* Colgate sensitive toothbrush : பழைய விலை ரூ.70 - புதிய விலை ரூ.62 (குறைவு ரூ.5)
Nescafe காப்பி தூள், சாக்லேட், மில்மெய்டு :
ஐஸ்கிரீம், சாக்லெட் ஆகியவை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், 1 லிட்டர் ஐஸ்கிரீம் விலை ரூ.33 வரை குறையும், 1 கிலோ சாக்லெட் கேக்களின் விலை ரூ.94 வரை குறையும்.
* Nescafe classic(45G) 265 ரூபாயில் இருந்து 235 ரூபாய்க்கும், Sunrise (45G) 190 ரூபாயில் இருந்து 170 ரூபாய்க்கும், Nescafe Gold (100G) 850 ரூபாயில் இருந்து 755 ரூபாயாக விலை குறைகிறது.
* KitKat chocolate 35 ரூபாயில் 30 ரூபாய்க்கும், Munch chocolate 30 ரூபாயில் இருந்து 25 ரூபாய்க்கும், KitKat Delights chocolate 210 ரூபாயில் இருந்து 185 ரூபாயாகவும் விலை குறைகிறது.
* Nescafe classic latte, Nescafe choco latte(200 ML) 80 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், Milkmaid (380 G) 155 ரூபாயில் இருந்து 145 ரூபாயாகவும் விலை குறைகிறது.
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுப்பொருட்கள் :
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுப்பொருட்கள் விலை 20 ரூபாயில் இருந்து 110 ரூபாய் வரை குறைய உள்ளது.
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுப்பொருட்களான Lactogen PRO 1 (400 G) 495 ரூபாயில் இருந்து 55 ரூபாய் குறைந்து 440 ரூபாய்க்கும், cerelac(350 G) 295 ரூபாயில் இருந்து 30 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கு விற்பனையாகும்.
மருந்துப்பொருட்கள் :
ரூ.1,000 மதிப்பிலான மருந்துகளுக்கு ரூ.100 வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோய்களுக்கான மருந்துகளுக்கு ரூ.1200 வரை விலை குறைகிறது. ஏற்கெனவே விலை அச்சிடப்பட்ட மருந்து அட்டைகளில், மீண்டும் புதிய விலை அச்சிடுவது இயலாத காரியம். எனவே, புதிய வரி விதிப்பின்படி, வாடிக்கையாளர்கள் உரிமையுடன் குறைந்த விலையில் மருந்துகளை கேட்கலாம்.
சிமெண்ட் மற்றும் கட்டுமானப்பொருட்கள் :
* சிமெண்ட் வரி 18 சதவீதமாக குறைந்துள்ளதால் இனிமேல் மூட்டைக்கு ரூ.40 வரை குறைகிறது. அதாவது கட்டுமானத் தொழில்களில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சிமென்ட் கொள்முதலில் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்க முடியும்.
* அதே நேரத்தில் கம்பிகள் ஏற்கனவே இருக்கும் 18 சதவீதத்தில் இருப்பதால் அதன் விலையில் மாற்றம் இல்லை.
* சிமென்ட், எஃகு, ஓடுகள் மற்றும் பெயிண்ட் மீதான ஜிஎஸ்டி குறைப்பால், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை சதுர அடிக்கு ரூ.150 குறையும். இதன் விளைவாக, வாங்குபவர்கள் 1,000 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.1.5 முதல் ரூ.7.5 லட்சம் வரை நேரடியாக சேமிக்க முடியும்.
வீட்டு உபயோக பொருட்கள் :
* ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ‘32 இன்ச்’-க்கு மேல் உள்ள டி.வி.க்கள், ‘டிஷ் வாஷர்’ போன்றவற்றின் விலை 10 சதவீதம் குறைகிறது. அந்த வகையில் டிஷ் வாஷர் மெஷின்களின் விலையை ரூ.8,000 வரையிலும் குறைகிறது.
* ரூ.40 ஆயிரம் மதிப்பிலான டிவிகளுக்கு ரூ.4 ஆயிரம் வரையும், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான ஏசி-களுக்கு ரூ.3,500 வரையும் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹீட்டருக்கு ரூ.7 ஆயிரம் வரையிலும் விலை குறையும். உதாரணமாக ரூ.40 ஆயிரம் விற்ற ஏ.சி., இப்போது ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.36 ஆயிரம் ஆகி இருக்கிறது. 2 டன் ஏசிக்கள் வாங்கும் போது ரூ.3,516 விலை குறையும்.
* தேராயமாக ரூ.49,000 விலையுள்ள 50 inch tv இனிமேல் தேராயமாக ரூ.2500 வரை விலை குறைய உள்ளது. அதேபோல் தேராயமாக 15,000 ரூபாய் வரை விற்பனையாகும் normal QLED Tvகள் 4,900 வரை விலை குறைய உள்ளது.
உதாரணத்திற்கு 40 இன்ச் டிவியின் விலை ரூ.22,000 ஆக இருக்கும் நிலையில், 28 சதவீத ஜிஎஸ்டியாக ரூ.6,160 சேர்த்து ரூ.28,160 ஆக விற்பனை செய்யப்பட்டது. தற்போது 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதால் ஜிஎஸ்டி ரூ.3,960 சேர்த்து ரூ.25,960 ஆக விற்கப்படும். இதன் மூலம் ரூ.2,200 வரை விலை குறையும்.
பைக் மற்றும் கார்கள் :
தற்போது ரூ.80000 உள்ள பைக்கின் விலையில் ரூ.6,000 வரை குறையும். ரூ.1.25 லட்சம் உள்ள பைக்குகளின் விலை ரூ.10 ஆயிரம் வரை குறையும். இதே போல ரூ.4.25 லட்சம் உள்ள கார்களின் விலையில் ரூ.34 ஆயிரமும், ரூ.6 லட்சம் உள்ள கார்களின் விலை ரூ.60 ஆயிரமும் குறையும். ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோக்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
* டிவிஎஸ் ரோனின் பைக் என்ட்ரி லெவல் வேரியன்ட் லைட்டனிங் பிளாக் வேரியன்ட் பழைய விலை ரூ.1,35,990 - புதிய விலை ரூ.1,24,790 விலை (ரூ.11,200 குறைவு).
* மேக்னா ரெட் வேரியன்ட் ரூ.1,38,520 இருந்து ரூ.1,27,090 என்ற விலை குறைந்து விற்பனையாகும் (ரூ. 11,430 குறைகிறது).
* டாப் வேரியன்ட்டில் நிம்பஸ் கிரே வேரியன்ட் பழைய விலை ரூ.1,73,720 - புதிய விலை ரூ.1,59,390 (ரூ.14,330 வரை குறைகிறது).
* மாருதி எஸ்.பிர்ஸஸோ (S-Presso) காரின் விலை, ரூ.1.29 லட்சம் குறைந்து தற்போது ரூ.3,49,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
* ஆல்டோ கே 10 - காரின் விலை 1 லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து, ரூ.3,69,900-க்கு விற்பனையாக உள்ளது.
* SWIFT மற்றும் DZIRE கார்களின் விலை சராசரியாக 85,000 ரூபாய் வரை குறைந்து, சுமார் 6 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* BREZZA, FRONX உள்ளிட்ட கார்களின் விலை ரூ.1.12 லட்சம் குறைந்துள்ளது.
கியா நிறுவனத்தின் காரின் விலை பட்டியல் :
* Kia Sonet - பழைய விலை ரூ.7.99 லட்சம் - புதிய விலை ரூ.6.50 லட்சம் (ரூ.1,64,471 வரை குறையும்)
* Kia Syros - பழைய விலை ரூ.9.49 லட்சம் - தோராயமாக புதிய விலை ரூ.7.62 லட்சம் (ரூ.1,86,003 வரை குறையும்)
* Kia Seltos - பழைய விலை ரூ.11.89 லட்சம் - பழைய விலையில் இருந்து தோராயமாக ரூ.75,372 வரை விலை குறைய உள்ளது
* Kia Carens - பழைய விலை ரூ.11.49 லட்சம் - தோராயமாக ரூ.48,513 வரை விலை குறைய உள்ளது.
அதேபோல் ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய டிராக்டர் வாங்கும் போது இனிமேல் ரூ.42 ஆயிரம் வரை சேமிக்க முடியும். டிராக்டர் டயர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டுள்ளதால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டர் டயர்களின் விலையில் ரூ.6,500 குறைந்துள்ளது.
குறையும் ஓட்டல் அறை வாடகை
தற்போது ரூ.1000க்கு கீழ் உள்ள ஓட்டல் அறைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ரூ.1000க்கு மேல் ரூ.7,500க்குள் கட்டணம் உள்ள அறைகளுக்கு தோரயமாக ரூ.500 வரை விலை குறையும்.
சிகரெட் விலை அதிகரிக்கும் :
ஆடம்பர மற்றும் உடலுக்கு தீங்கான பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இனி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. அவற்றில் சிகரெட்டும் ஒன்று. இதற்கு முன் சிகரெட்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இனி அவைகளுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும். இதனால் ரூ.19 ஆக இருக்கும் சிகரெட் விலை ரூ.22 வரை உயரக் கூடும். ரூ.10 ஆக உள்ள சிகரெட் விலை ரூ.11 ஆக அதிகரிக்கும்.
அதேபோல் 1200 சிசிக்கு மேல் உள்ள கார்கள், 350 சிசிக்கு மேல் உள்ள பைக்களின் விலை கணிசமாக உயரும். ரூ.3.35 லட்சம் விலையுள்ள புல்லட் பைக்குகள் ரூ.31,000 விலை அதிகரிக்கும். ரூ.12.30 லட்சம் விலையுள்ள கார்களின் விலையில் ரூ.1.15 லட்சம் அதிகரிக்கும். ரூ.35 லட்சத்திற்கு மேல் விலையுள்ள கார்களை வாங்கினால் கூடுதலாக ரூ.3.40 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.
பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை, கார்பனேற்றப்பட்ட பானங்கள், சர்க்கரையுடன் கூடிய குளிர் பானங்கள், சொகுசு படகுகள் ஹெலிகாப்டர்கள் உட்பட தனிப்பட்ட விமானங்கள், நிலக்கரி, லிக்னைட், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் சேவைகள் இவற்றின் விலை அதிகரிக்க உள்ளது.
புகார் செய்யலாம் :
இந்த விலை குறைப்பை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொருட்களின் விலை குறையாமல் அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் நேரடியாக புகார் அளிக்க நுகர்வோர் புகார் ஒருங்கிணைந்த இணையதளம் https://consumerhelpline.gov.in மற்றும் தேசிய நுகர்வோர் உதவி எண் 1800-11-4000 மற்றும் 1915 ஆகியவற்றில் சிறப்பு பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.
செல்போனில் இருந்து 14404 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.