

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக விலை வீழ்ச்சியால் மாம்பழ ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மாம்பழ ஏற்றுமதி கணிசமான வருவாயை ஈட்டி தந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இவ்விரு மாநிலங்களில் தமிழ்நாட்டைக் காட்டிலும் மாம்பழக் கூழ் ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் மாம்பழக் கூழ் ஆலைகளை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்க உள்ளது. இதன் மூலம் மாம்பழ விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாம்பழம் ஏற்றுமதியை அதிகரிக்கவும், கூழ் ஆலைகளை அமைக்க இளைஞர்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது. கடந்த மாம்பழ சீசன்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போனது. இனி வரும் சீசன்களில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, தமிழ்நாட்டில் மாம்பழ கூழ் அலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இந்திய மாம்பழங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களில் தமிழகத்தின் பங்கு, தற்போது மிகவும் குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க உலகத் தரத்திலான பேக்கேஜிங் அவசியம். இதனை மேற்கொள்ள மாம்பழக் கூழ் ஆலைகள் தமிழகத்தில் அதிக அளவில் நிறுவப்பட வேண்டும். இதற்காகவே தற்போது தமிழக அரசு மாம்பழக் கூழ் ஆலைகளை அமைக்க முன் வருபவருக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது.
மாம்பழ கூழ் ஆலைகளில் குளிர்பதன கிடங்குகள், தரமான பேக்கேஜிங் வசதி மற்றும் தரச் சோதனை ஆய்வகம் போன்றவற்றை அமைக்க 30% முதல் 40% வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும். அதோடு மாம்பழ கூழ் ஆலைகள் அமைத்திடவும் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாம்பழ ஏற்றுமதி ஊக்குவிப்பு சலுகைகள் குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட உள்ளது” என அவர் தெரிவித்தார்.
ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மாம்பழ பழச்சாறு, சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த மானிய அறிவிப்பால், தமிழ்நாட்டிலும் இனி மாம்பழ மதிப்பு கூட்டு பொருள்களின் தயாரிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மாம்பழ விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்ந்து, வருவாய் அதிகரிக்கும். அதோடு விவசாயம் தொடர்பான தொழில் செய்ய முயற்சிக்கும் இளைஞர்களுக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும்.