தூய்மை காவலர்களுக்கு குட் நியூஸ்..! மதிப்பூதியத்தை ரூ.6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை..!

Cleaning staff
Sanitation Workers
Updated on

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து போராடிய அப் பணியாளர்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழகத்தில் 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் தேவை என்ற அவுட்சோர்சிங் அடிப்படையில் 66,025 தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தூய்மை காவலர்கள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பணியில் மட்டுமின்றி சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சிப் பகுதிகளைத் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக தமிழகத்தின் திடக்கழிவு மேலாண்மையில் தூய்மை காவலர்களின் பங்கு மிக முக்கியமானதாகிறது.

இந்நிலையில் பெரும்பாலான கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் (Sanitation Workers) தினக்கூலி அல்லது மதிப்பூதிய அடிப்படையில் பணிபுரிகிறார்கள்.

மேலும் தற்போதுள்ள மதிப்பூதியம் வாழ்க்கைச் செலவுகளுக்கு போதவில்லை என்பது அவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. சில ஊராட்சிகளில் தாமதமாக ஊதியம் வழங்கப்படுவதாகவும் புகார் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை முன்வைத்தும், மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தக் கோரியும் பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் கோரிக்கையை ஏற்று 2023-ல் ரூ.3,600லிருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்பட்டிருந்த மதிப்பூதியம், தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5,000-லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காகக் கூடுதலாக ரூ.417 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 66,000-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தும் என சொல்லப்படுகிறது.

மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்த வேண்டும் என்பதுடன் நிரந்தரப் பணியாளர்களாக (Regularisation) மாற்ற வேண்டும், EPF, ESI, ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் முறைப்படுத்த வேண்டும்,

பாதுகாப்பு உபகரணங்கள் (கையுறை, முககவசம், பூட்ஸ்) தடையின்றி தரவேண்டும், காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் போன்றவைகளும் இவர்களது முக்கிய கோரிக்கைகள் ஆக இருந்தது.

எனினும் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்த இவர்களது போராட்டத்துக்கு கிடைத்த சிறு வெற்றியாக இந்த மதிப்பூதிய உயர்வு உள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டுமனை வாங்குவோர் கவனம்! - பதிவுத்துறையின் புதிய சுற்றறிக்கை; என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும்..?
Cleaning staff
logo
Kalki Online
kalkionline.com