

கூகுள் நிறுவனம் இந்தியக் கல்லூரி மாணவர்களுக்கு சுமார் ரூ.4,000 மதிப்பிலான ‘Google AI Plus’ சேவையை 1 வருடத்திற்கு இலவசமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், கல்வி தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுளின் (Google) தொழில்நுட்ப வசதிகள் பொதுமக்கள் நினைத்து பார்க்க முடியாத பல்வேறு விஷயங்களை பெறுவதற்கு உதவிகரமாக இருந்து வருகிறது. கூகுள் என்பது இணையத் தேடல்பொறி, மேகக்கணி பயன்பாடு (Cloud Computing), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் உலகின் முன்னணியில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும்.
1998 ஆம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மவுண்டன் வியூ (Mountain View) பகுதியில் அமைந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார்.
தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது கூகுள்.
பிரமாண்டமாக வளர்ந்து, உலகிலேயே இணையத்தில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் கூகுள் நிறுவனம், தற்போது இந்தியக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியக் கல்லூரி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் https://gemini.google/students ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஆண்டிற்கு ரூ.4,000 கட்டணத்தில் வழங்கப்படும் ‘ஜெமினி’ (Gemini) மற்றும் ‘கூகுள் AI பிளஸ் சேவை’யை (Google AI Plus), தகுதிபெறும் கல்லூரி மாணவர்கள் 1 ஆண்டிற்கு முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
கூகுள் அறிவித்துள்ள இந்த சிறப்புச் சலுகை மாணவர்கள் தங்களது கல்லூரி பாடத்திட்டங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
பொதுவாக மாதந்தோறும் ரூ.399 கட்டணம் செலுத்தி பெற வேண்டிய இந்த சேவையை, மாணவர்கள் தங்களின் படிப்புத் தேவைகளுக்காக 12 மாதங்களுக்குக் கட்டணமில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்த இலவசச் சந்தாவின் மூலம் மாணவர்களுக்கு 400 ஜிபி வரையிலான பிரம்மாண்டமான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) வசதி கிடைக்கிறது. இதனை கூகுள் போட்டோஸ் (Google Photos), டிரைவ் மற்றும் ஜிமெயில் (Drive and Gmail) ஆகியவற்றுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல், கூகுள் சர்ச் (Google Search) மற்றும் ஜிமெயிலுக்குள் ஒருங்கிணைக்கப்பட்ட ஜெமினி ஏஐ (Gemini AI) வசதியையும் அவர்கள் தடையின்றிப் பெற முடியும்.
குறிப்பாக, சினிமா பாணியிலான காட்சிகளை உருவாக்க உதவும் ‘புளோ’ (Flow) என்ற ஏஐ கருவியையும், இசை உருவாக்கத்திற்கான ‘ஏஐ மியூசிக் ஸ்டுடியோ’ (AI Music Studio) வசதியையும் மாணவர்கள் இந்தச் சலுகையின் கீழ் இலவசமாகவே அனுபவிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
மேலும் மாணவர்களின் கல்விக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பல புதிய அம்சங்களையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ‘ஸ்டூடண்ட் ஹப்’ (Student Hub) என்ற பகுதி மூலம் மாணவர்கள் தங்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ற கருவிகளை எளிதில் அணுக முடியும்.
மேலும், ‘ஸ்டடி நோட்புக்’ (Study Notebook) என்ற அம்சம் மூலம் மாணவர்கள் எந்தப் பாடத்தில் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட கல்வித் திட்டங்களை இந்த ஏஐ உருவாக்கித் தரும்.
ஆழமான ஆராய்ச்சி அறிக்கைகளைத் தயார் செய்யவும், அவற்றை ஜெமினி ஏஐ-யுடன் விவாதிக்கவும் உதவும் வசதிகள் மாணவர்களின் கல்வித் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் மாணவர்கள் தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ளவும், நவீனக் கல்வி முறைகளை அறிந்துகொள்ளவும் கூகுள் வழங்கியுள்ள இந்தச் சலுகை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
இச்சலுகையைப் பெறுவது எப்படி?
தகுதியுள்ள இந்தியக் கல்லூரி மாணவர்கள் கூகுள் ஒன் (Google One) இணையதளத்திற்குச் சென்று இந்த ஒரு வருட இலவசச் சந்தாவைப் பெற்றுக்கொள்ளலாம்.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் https://gemini.google/students என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தங்களது மாணவர் அடையாளச் சான்றை உறுதிசெய்வதன் மூலம் இந்த 1 வருட இலவசச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஓராண்டு முடிவடைந்த பிறகு, விருப்பமுள்ளவர்கள் மாதம் 399 ரூபாய் செலுத்தித் தொடர்ந்து கொள்ளலாம் அல்லது ரத்து செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் இப்போதே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தித் தங்களின் கல்விப் பயணத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றத் தொடங்கலாம்.