

மனித உடலின் ஆகச்சிறந்த, இன்னும் முழுமையாக அவிழ்க்கப்படாத ஒரு பிரபஞ்ச ரகசியம் என்றால் அது மனித மூளைதான். அதிலும் குறிப்பாக, மூளையையும் முதுகுத்தண்டையும் இணைக்கும் 'மூளைத் தண்டு' (Brainstem) பகுதிதான் நமது சுவாசம், இதயத் துடிப்பு, உறக்கம், விழிப்புணர்வு என அத்தனை தானியங்கி இயக்கங்களையும் கட்டுப்படுத்தும் முதன்மைச் சாவியாகும். மிகக் குறுகிய, சிக்கலான இந்தப் பகுதிக்குள் எந்த நரம்பு எங்கே செல்கிறது, அதன் வேதிப்பண்புகள் என்ன என்பதை ஆராய்வது உலக மருத்துவ உலகிற்குப் பல தசாப்தங்களாக ஒரு இருட்டு அறையாகவே இருந்து வந்தது.
ஆனால், அந்த இருட்டு அறைக்குள் இப்போது ஒரு பிரகாசமான விழிப்புணர்வு வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறது நமது சென்னை ஐஐடி (IIT Madras)! வளாகத்தில் உள்ள 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்' (Sudha Gopalakrishnan Brain Centre).
உலகிலேயே முதன்முறையாக மனித மூளைத் தண்டுப்பகுதிக்கு மிகத் துல்லியமான (மூளை வரைபடம்) 3D வரைபடத்தை (3D Atlas) உருவாக்கி உலகச் சாதனை படைத்துள்ளது.
விஞ்ஞானிகளால் ANCHOR என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், மருத்துவ உலகத்தாரால் "மூளையின் கூகுள் மேப்" என்று வியப்புடன் அழைக்கப்படுகிறது.
ஏன் இதனை 'கூகுள் மேப்' என்கிறார்கள்?
நாம் கூகுள் மேப்பில் ஒரு நாட்டின் வரைபடத்தில் தொடங்கி, பின் மாநிலம், மாவட்டம், தெரு எனத் தனித்தனி வீடுகள் வரை எப்படி 'ஜூம்' (Zoom) செய்து பார்க்க முடிகிறதோ, அதே போன்றதொரு மாயாஜாலத்தை இந்த ANCHOR வரைபடம் மருத்துவ உலகில் சாத்தியமாக்கியுள்ளது.
ஒரு நோயாளியின் ஒட்டுமொத்த மூளையின் எக்ஸ்-ரே அல்லது எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் பிம்பத்தில் தொடங்கி, அப்படியே உள்ளே ஜூம் செய்து திசுக்கள் மற்றும் சிக்னல்களைக் கடத்தும் நரம்பு நார்த் தொகுப்புகள் வழியாக, மிக ஆழத்தில் இருக்கும் ஒற்றை நரம்புச் செல் (Single Cell) வரை துல்லியமாகக் கீழே இறங்கிப் பார்க்க முடியும்.
மனித முடியின் தடிமனைவிடப் பத்து மடங்கு மெல்லியதாக, ஒரு மைக்ரான் அளவில் மூளைத்தண்டுப் பகுதியை நூற்றுக்கணக்கான துண்டுகளாக வெட்டி, மிக அதிநவீன ஸ்கேனிங் மற்றும் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் 3D-ஆக ஒன்றாக இணைத்து இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளனர் சென்னை ஐஐடி விஞ்ஞானிகள்.
மருத்துவ உலகிற்குக் கிடைக்கப்போகும் 5 மாபெரும் நன்மைகள்:
1. துல்லியமான நரம்பியல் அறுவை சிகிச்சை (Precision Neurosurgery):
மூளைத் தண்டுப்பகுதியில் ஏதேனும் கட்டிகளோ (Tumor) அல்லது பக்கவாதத்தால் இரத்தக் கசிவோ ஏற்பட்டால், அங்கே அறுவை சிகிச்சை செய்வது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். ஏதேனும் ஒரு மில்லிமீட்டர் நரம்பு மாறினாலும் நோயாளியின் சுவாசம் நின்றுவிடலாம். இப்போது இந்த 3D கூகுள் மேப் இருப்பதால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எந்தவொரு நல்ல நரம்பையும் சேதப்படுத்தாமல், பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் துல்லியமாகச் சென்றடைந்து (Targeted surgery) பாதுகாப்பாக அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
2. மூளை முடக்கு நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிதல்:
வயதான காலத்தில் பலருக்கு ஏற்படும் அல்சைமர் (Alzheimer's - நினைவாற்றல் இழப்பு), பார்கின்சன் (Parkinson's - கைகால் நடுக்கம் மற்றும் தசை இறுக்கம்), மற்றும் டிமென்ஷியா (Dementia - மறதி நோய்) போன்ற நோய்கள் மூளையின் எந்தப் பகுதியில், எந்தெந்தச் செல்கள் அழிவதால் ஏற்படுகின்றன என்பதை இதுவரை செல் அளவில் துல்லியமாகப் பார்க்க முடிந்ததில்லை. இந்த வரைபடம் மூலம், நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே எந்த வேதிப்பண்பு கொண்ட நரம்புச் செல்கள் பாதிக்கப்படத் தொடங்குகின்றன என்பதைக் கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறியமுடியும்.
3. பக்கவாதப் புனர்வாழ்வு (Stroke Rehabilitation):
விபத்து அல்லது பக்கவாதம் காரணமாக மூளைத் தண்டுப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, கைகால்கள் இயங்காமல் படுத்த படுக்கையாகும் நோயாளிகளுக்கு, எந்த நரம்புப் பாதை (Fibre tract) துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மேப் மூலம் கண்டறியலாம். அதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்குத் துல்லியமான உடற்பயிற்சி (Physiotherapy) மற்றும் நரம்புத் தூண்டல் சிகிச்சைகளை வழங்கி, அவர்களை மிக வேகமாக மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியும்.
4. புதிய பக்கவிளைவில்லா மருந்துகளின் கண்டுபிடிப்பு:
இதுவரை நரம்பியல் நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கும்போது, அது ஒட்டுமொத்த மூளையையும் பாதிக்கும்படிதான் கொடுக்க முடிந்தது. இதனால் பக்கவிளைவுகள் அதிகமாக இருந்தன.
ஆனால், ஐஐடி-யின் இந்த வரைபடத்தில் 200-க்கும் மேற்பட்ட நரம்பு மையங்களின் வேதியியல் பண்புகள் துல்லியமாகக் கொடுக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட அந்தப் பாதிப்படைந்த செல்களை மட்டும் குறிவைத்து வேலை செய்யும் வீரியமிக்கப் புதிய மருந்துகளை (Targeted drugs) உலக மருந்து நிறுவனங்களால் தயாரிக்க முடியும்.
5. மருத்துவ மாணவர்களுக்கான ‘டிஜிட்டல்’ வழிகாட்டி:
இனி மருத்துவ மாணவர்கள் மனித மூளையை வெறும் புத்தகப் படங்களாக மட்டுமே படிக்க வேண்டியதில்லை. லேப்டாப் திரையிலேயே மூளையின் அத்தனை ஆழமான நரம்புப் பாதைகளையும் 3D வடிவில் ஜூம் செய்து, ஒரு உயிருள்ள மனித மூளைக்குள் டிஜிட்டல் முறையில் பயணிப்பது போலப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
உலகிற்கு இந்தியாவின் இலவசக் கொடை:
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் அஜய் குமார் சூட் இந்தச் சாதனையை உலக அரங்கில் பாராட்டியுள்ளார். மிக முக்கியமாக, இந்த ஒட்டுமொத்த 3D வரைபடத் தரவுகளையும் anchor.humanbrain.in என்ற இணையதளத்தில் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் இலவசப் பயன்பாட்டிற்காகப் பொதுவெளியில் (Publicly accessible digital dataset) சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகள் பலவும் கோடிகளைத் முதலீடு செய்து வணிக நோக்கில் செயல்படும்போது, இந்திய மண்ணில் உருவான இந்த மாபெரும் மருத்துவப் புரட்சியை உலக மாந்தர்களின் நலனுக்காக இலவசமாகத் தந்து அன்னைத் திருநாட்டின் பெருமையை உலக அரங்கில் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது சென்னை ஐஐடி!