

மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து மற்றும் முறையான மருத்துவப் பலன்கள் இல்லை எனக் கூறி, 16 நிலையான கூட்டு மருந்துகளுக்கு (Fixed-Dose Combination - FDC) மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதில் பாரசிட்டமால் கலந்த சில வலி நிவாரணி மருந்துகள் மற்றும் சில தோல் நோய் சிகிச்சை மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்த மருந்துகள் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அலோவேரா, வைட்டமின்-இ, பாராசிட்டமால் உள்ளிட்ட கலவை மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்த மருந்துகளின் கலவைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உண்டான எந்தொரு சாத்தியக்கூறும் இல்லை என்று நிபுணர்கள் ஆய்வு செய்தப் பிறகே இந்த தடை அமலுக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிகிச்சை ரீதியான நியாயம் இல்லாததாலும், பயனை விட ஆபத்துகள் அதிகம் இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்த 16 மருந்துகளையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ மற்றும் பயன்படுத்தவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட தயாரிப்புகளில் அமோக்ஸிசிலின்(amoxicillin), செஃபுராக்ஸைம்(cefuroxime) மற்றும் செஃபட்ராக்ஸிலில்(cefadroxyl) போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொண்ட கலவைகள், வலி நிவாரணம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கற்றாழை அடிப்படையிலான பல தோல் பராமரிப்பு மருந்து கலவைகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது, தடைசெய்யப்பட்ட காம்பினேஷன் மருந்துகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்துக் கலவைகள் தசைப்பிடிப்பு நீக்கி மருந்துகள், வலி நிவாரண மருந்துகள், தோல் மருத்துவத் தயாரிப்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து அடிப்படையிலான தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை வகைகளைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கூட்டு மருந்துகள் அறிவியல் பூர்வமாகப் பயனுள்ளதாக இல்லை என்று நிபுணர் குழுக்கள் கண்டறிந்துள்ளன. எனவே அபத்தமான மருந்துக் கலவைகளை சந்தையிலிருந்து அகற்றுவதையும், நோயாளிகளுக்குக் கிடைக்கும் மருந்துகள் அறிவியல் சான்றுகள் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்களால் ஆதரிக்கப்படுவதை உறுதி செய்வதையும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இவை மனிதர்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரியவந்ததையடுத்து மருத்துவக் குழுவின் (DTAB) பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
நிலையான அளவு கலவை மருந்துகளின் தடைசெய்யப்பட்ட பட்டியல்
1. Amoxicillin + Serratiopeptidase + Lactobacillus Sporogenes
2. Amoxicillin + Serratiopeptidase
3. Amoxicillin + Cloxacillin + Lactic Acid Bacillus + Serratiopeptidase
4. Cefuroxime + Serratiopeptidase
5. Cefadroxyl + Probenecid
6. Dicyclomine + Paracetamol + Clidinium Bromide + Chlordiazepoxide
7. Dicyclomine + Paracetamol + Clidinium Bromide
8. Aloe Extract + Allantoin + Alphatocopherol Acetate + D-Panthenol + Vitamin A
9. Aloe Extract + Vitamin E + Dimethicone + Glycerine
10. Aloe Vera + Jojoba Oil + Vitamin E
11. Aloe vera + Orange oil
12. Aloe vera + Vitamin E + Herbal
13. Paracetamol + Lignocaine
14. Gliclazide + Chromium Picolinate
குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட இரண்டு நிலையான அளவு சேர்க்கைகளும் (fixed-dose combinations), போதுமான சிகிச்சை ஆதரவு இல்லாதது கண்டறியப்பட்டதை அடுத்து தடை செய்யப்பட்டன. தடைசெய்யப்பட்ட கலவைகளில் கற்றாழை அடிப்படையிலான பல தோல் மருந்துக் கலவைகள் அடங்கும்.
மேலும் சில மருந்துக் கலவைகள் ஒழுங்குமுறை கண்ணோட்டத்தில் சரியாக வரையறுக்கப்படாமலும், போதுமான அளவு வகைப்படுத்தப்படாமலும் இருப்பது குறித்து நிபுணர் குழு கவலை எழுப்பியது.
இந்த மருந்துக் கலவைகளில் சில, அவற்றின் உருவாக்கம் சரியாக வரையறுக்கப்படாமலும், போதுமான அளவு பண்புப்படுத்தப்படாமலும் இருந்ததால், ஒழுங்குமுறை கண்ணோட்டத்தில் மேலும் சிக்கலானதாகி, கூடுதல் விமர்சனங்களைப் பெற்றன என்று ஒரு நிபுணர் கூறினார்.
மருந்துகளின் பகுத்தறிவுப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், நோயாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியே இந்த சமீபத்திய நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் இந்தத் தடையை கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் இந்த 16 மருந்துகளில் ஏதேனும் உள்ளதா எனச் சந்தேகம் இருந்தால், உங்கள் மருத்துவரின் (Doctor) அல்லது மருந்தாளுநரின் (Pharmacist) ஆலோசனையைப் பெற்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.