சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? பெண்களுக்கு ₹1 கோடி வரை கடன் தரும் மத்திய அரசு திட்டங்கள்!

மத்திய அரசு திட்டங்கள்
மத்திய அரசு திட்டங்கள்Image credit: AI Image
Updated on

1. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) :

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக அதிக வட்டி விகிதத்துடன் கூடிய சிறுசேமிப்பு திட்டம்தான் இது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், அவர்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சமாக வருடத்திற்கு ₹250 முதல் அதிகபட்சமாக ₹1,50,000 வரை செலுத்தலாம். தற்போது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுவது சிறப்பு. கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து 21 ஆண்டுகள் அல்லது பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகித் திருமணம் நடைபெறும்போது முதிர்வு அடைந்து கணிசமான தொகை கிடைக்கும்.

மேலும் முதலீடு செய்யப்படும் தொகை, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய அனைத்தும் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் முற்றிலும் வரிவிலக்கு பெறும். விரும்புவோர் அருகிலுள்ள அஞ்சலகம் (Post Office) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை/தனியார் வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கணக்கைத் துவங்கலாம்.

2. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)

சிறு மற்றும் குறு பெண் தொழில்முனைவோருக்கு ரூபாய் 50,000 முதல் ரூபாய் 10 லட்சம் வரை பிணையில்லா கடன்களை வழங்கும் இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். மேலும் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் தொழில்களில் ஈடுபடுபவர்கள் ரூ. 10 லட்சம் வரை கடன் பெற முடியும்.

இத்திட்டம் சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கடன்களை வழங்குகுகிறது .

சிசுவில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ. 50,000 வரையும் கிஷோர் திட்டத்தில் ஏற்கனவே தொழிலைத் தொடங்கி, அதனை மேம்படுத்த விரும்புவோருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரையும், நிலைபெற்றுள்ள தொழில்களை விரிவுபடுத்துவதற்காக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை தருண் திட்டத்திலும் வழங்கப்படும்.விவசாயம் அல்லாத உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள்.கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் அல்லது கிராமப்புற வங்கிகள் மூலம் இந்த கடன்களைப் பெறலாம். முத்ரா கடனின் பிணை தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சம்.

3.பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ (Beti Bachao, Beti Padhao - BBBP)

'மகளை காப்பாற்றுங்கள், மகளுக்குக் கல்வி கொடுங்கள்' என்று பொருள்படும் வகையில் இந்திய அரசால் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முக்கிய சமூக நலத்திட்டமாக பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் கல்வி மற்றும் சம உரிமைகளை உறுதிப்படுத்தி ஊக்குவிக்கும் திட்டம்தான் இது.

குறிப்பாக பெண் சிசுக்கொலைகளை தடுத்தல், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் அவர்களின் கல்வியை ஊக்குவித்தல் இதன் முக்கிய நோக்கங்களாகும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ,சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் , கல்வி அமைச்சகம் ஆகிய மூன்று அமைச்சகங்கள் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெண் குழந்தைகளின் பள்ளிக் கல்வியை உறுதிசெய்தல், இடைநிற்றலைக் குறைத்தல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகிய பலன்களை இத்திட்டம் தருகிறது.

4. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு தரும் இந்திய அரசின் சமூக திட்டம்தான் இது. விறகு அடுப்புகளால் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி கிராமப்புற வசதியற்ற பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த இலவச எல்.பி.ஜி (LPG) இணைப்புகள் ஏழைக் குடும்பங்களின் பெண் உறுப்பினர்கள் பெயரில் வழங்கப்படுகின்றன. சிலிண்டர் வாங்குவதற்கான முன்பணம் மற்றும் அடுப்புக்கான கட்டணத்தை அரசே ஏற்பது சிறப்பம்சம். மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ.300 வரை மானியம் போன்ற அரசின்சிறப்பு மானியங்கள் கிடைக்கும்.

இதன் விதிகள் எளிமையானது. விண்ணப்பதாரர் கண்டிப்பாக குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பமாக இருக்க வேண்டும்.வீட்டில் ஏற்கனவே வேறு எந்த எல்.பி.ஜி இணைப்பும் இருக்கக் கூடாது.

முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா இணையதளம் வழியாக அல்லது அருகில் உள்ள எல்.பி.ஜி விநியோகஸ்தரை நேரடியாக அணுகி விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்கலாம்.

5. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY)

இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் மகப்பேறு திட்டதான் இது.கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், அவர்களது ஊதிய இழப்பிற்கு ஈடாக நிதி உதவி வழங்கவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகுதியான பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5,000 வரை மூன்று தவணைகளாக நிதி உதவி வழங்கப்படுகிறது.

முதல் முறையாகக் கர்ப்பமடைந்த பெண்கள் எவராயினும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஏற்கனவே மகப்பேறு சலுகைகளைப் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் வரமுடியாது.

பயனாளர் ஆரம்பகாலத்தில் கர்ப்பத்தைப் பதிவு செய்தல், பரிசோதனைகள் மற்றும் குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தகுதியற்றவர்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகலாம். அதிகாரப்பூர்வ myScheme இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

6.ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்

பட்டியல் மற்றும் பழங்குடியினர் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமே இத்திட்டம். உற்பத்தி, சேவை அல்லது வர்த்தக துறைகளில் புதிய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இதில் வங்கிக் கடன் பெறலாம். பெற்ற கடனை 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் SC/ST பிரிவினர் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் திட்ட மதிப்பில் குறைந்தபட்சம் 10% தொகையை பயனாளர் தனது சொந்த முதலீடாகச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பயனாளர்கள் Stand Up India அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்கோடிலைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்

7.மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC)

பெண்களுக்கான இரண்டு ஆண்டு கால அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம் .பெண்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட சிறு சேமிப்புத் திட்டமான இது ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரை இரண்டு ஆண்டு காலத்திற்குச் செயல்பட்டு, தற்போது முடிவடைந்துள்ளது. பெண்கள் தங்கள் பெயரிலோ அல்லது பெண் குழந்தைகளின் பாதுகாவலராக பெற்றோரோ இந்தத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம்.வைப்புத் தொகை (Deposit): குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தச் சேமிப்புக்கு ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது, இது காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. முதலீடு செய்த நாளிலிருந்து 2 ஆண்டுகள் முதிர்வு காலமாகும். கணக்கு தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு, மொத்த இருப்பில் 40% வரை பகுதி பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்பவை இதன் சிறப்பம்சங்கள். இதில் இணைந்து பயன்பெற்றவர்கள் ஏராளம்.

8. மகிளா சக்தி கேந்திரா ( MSK)

திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு டிஜிட்டல் கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து போன்ற சேவைகள் மூலம் கிராமப்புற பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் அதிகாரமளிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கிராமப்புற பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கும், அரசின் திட்டங்களை அணுகுவதற்கும் இது ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது. தன்னார்வலர்கள் மூலம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுவதால், பெண்களுக்குத் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு போன்ற சேவைகள் மேம்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிபில் ஸ்கோர் 750 இருந்தும் ரிஜெக்ட் ஆகுதா? வங்கிகளின் புதிய ரகசிய விதிமுறைகள்!
மத்திய அரசு திட்டங்கள்
logo
Kalki Online
kalkionline.com