

அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற உள்துறை சுற்றறிக்கையை எதிர்த்தும், மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதிக்க கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மரபுப்படி, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்திய மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரியும் சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல் செய்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர்களின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், உணர்வையும் குறிப்பதாகும். தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு விழாக்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எவ்வித மாற்றமும் இல்லாமல் முதல் பாடலாகப் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று காலை இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.