

முதலமைச்சரின் முதல் அரசு நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் ஏராளமான தமிழ் எழுத்துக்கள் பிழையுடன் இருந்தது சோசியல் மீடியாவில் விவாதமாகி இருக்கிறது. குறிப்பாக தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள "தமிழ்நாடு அரசு" என்ற வார்த்தையே எழுத்துப் பிழையுடன் இருந்தது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளதுடன், அரசு வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ வீடியோவிலேயே இத்தனை கடுமையான குளறுபடிகளா எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தவெக ஆட்சிக்கு வந்ததும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் கடந்த மே மாதம் 10-ம்தேதி பதவியேற்றுக்கொண்டதும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்குவதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பித்தார்.
இந்த நிலையில் நேற்று பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடைக்கு முதற்கட்டமாக ரூ.354 கோடி ஒதுக்கீடும், இரண்டாம் கட்டமாக 2500 புதிய பணியிடங்களும் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.
இதற்கிடையே அந்த விழாவில் அரசுத் தரப்பில் ஒளிபரப்பப்பட்ட பிரத்யேக ஏஐ வீடியோவில் இடம்பெற்றிருந்த ஏராளமான எழுத்துப் பிழைகள் மற்றும் தமிழ் வார்த்தை தவறுகள் தவெக அரசுக்குத் தேவையற்ற புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தொடக்க விழாவில் ஏஐ மூலமாக தயாரிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விளக்க வீடியோ எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது.
ஏஐ மூலமாக தயாரிக்கப்பட்ட வீடியோவில் பல இடங்களில் எழுத்துப் பிழைகளும், வாக்கியப் பிழைகளும் இருந்தது.
குறிப்பாக, அந்த ஏஐ வீடியோவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையே தவறாக வடிவமைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, 'தமிழ்நாடு அரசு' என்ற வார்த்தை பாதி தமிழிலும், மீதி வேறு ஒரு மொழியிலும் சிதைந்து இடம் பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, வீடியோவில் காட்டப்பட்ட 'ஆலந்தூர் மெட்ரோ ரயில்' நிலையத்தின் பெயரும் மிகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வளவு பெரிய மாநில அளவிலான அரசு விழாவில் வெளியிடப்படும் ஒரு வீடியோவில், இத்தனை வெளிப்படையான தவறுகள் இருந்தும் அதனைச் சரிபார்க்காமல் அப்படியே அலட்சியமாக வெளியிட்டது ஏன் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அதுவும் முதலமைச்சர் கலந்து கொண்ட முதல் அரசு விழாவிலேயே இத்தனை தமிழ் பிழைகளுடன் வீடியோ ஒளிபரப்பப்பட்டது எப்படி என்று எதிர்க்கட்சிகள் உடனே போர்க்கொடி தூக்கியுள்ளன. எப்படா தவெகவிற்கு எதிராகப் பிரச்சினை செய்யலாம் என்று காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு, இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இதற்கிடையே இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன என்று கூறியுள்ளார்.
மேலும் பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏ.ஐ. காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?
பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது’ என்று பதிவிட்டுள்ளார்.