தமிழகம் முழுவதும், 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்புற்று நோய் மற்றும் 30 வயது நிரம்பிய பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்வதற்கு அரசு திட்டமிட்டு, இதில் முதல் கட்டமாக திருப்பத்துார், ராணிப்பேட்டை, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சோதனை முயற்சி கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி தொடங்கியது.
இதற்கான தொடக்க விழா, ஈரோட்டில் நடைபெற்ற நிலையில், இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் முத்துசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் அந்தந்த மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் மூலமாக அழைப்பிதழ் அச்சடித்து, ஒரு தாம்பூலத் தட்டில் தேங்காய், வாழைப்பழம் வைத்து வீடு வீடாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அளவிலான ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் புற்றுநோய் கண்டறியும் சோதனை நான்கு மாவட்டங்களில் மட்டும் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலம் முழுவதும் இந்த சோதனையை விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டது.
‘இந்த சோதனையின் மூலமாக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் பட்சத்தில், எளிதில் அந்நோயை குணப்படுத்த முடியும்’ என்கின்றனர் மருத்துவத் துறையினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் பரிசோதனை செய்ய சற்று அச்சப்பட்டு வந்தனர். ஆனாலும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 கர்ப்பப்பை புற்றுநோய், ஐந்து மார்பக புற்றுநோய், 7 வாய்ப்புற்று நோய் என 36 பேருக்கு புதிதாக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இதற்கான சிகிச்சைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தங்களுக்குத் தெரியாமலேயே புற்றுநோயால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேபோல, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டவுடன் நாமாகவே முன்சென்று அதற்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், புற்றுநோய் என்பது தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு உண்டு. காலம் கடந்து போனால் அதற்கான சிகிச்சை முறைகள் மிகவும் கடினமானதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தின்படி நாம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அங்கு இதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சந்தேகத்திற்கு உட்படும் நபர்களுக்கு உறுதி செய்யும் சோதனையும் செய்யப்படும். அதன் பின்னர் யாருக்கெல்லாம் இந்நோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறதோ, அவர்களுக்கு அதற்கான சிகிச்சைகள் உடனடியாக தொடங்கும் வகையில் இத்திட்டம் ஏற்கெனவே நான்கு மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.