குஜராத்தின் அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் 135 பேர் பள்ளிக்கு வராமல், சம்பளம் வாங்கிக்கொண்டு வந்துள்ளனர். அதில் 50 பேர் வெளிநாடுகளில் இருந்துக்கொண்டு சம்பளம் வாங்கி வருவது அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலைப் பார்க்காமல், சம்பளம் மட்டும் அதிகமாகவும் சரியாகவும் வாங்குகிறார்கள் என்ற பொதுவான கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், இந்த செய்தி மேலும் அதற்கு வலுவேத்தியுள்ளது. கடந்த வாரம் வெளியான ஒரு தகவல், அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து சம்பளம் வாங்கி வருகிறார்.
இவர் ஆண்டுக்கு ஒருமுறை அதுவும் தீபாவளிக்கு மட்டுமே சொந்த ஊருக்கு வந்துச் செல்கிறார்.
இதேபோல் கனடா நாட்டில் வசித்துக்கொண்டு தர்ஷன் படேல் என்பவர் சம்பளம் வாங்கி வந்திருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களால், மாநில கல்வித் துறை அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டது. பனஸ்கந்தா, கட்ச் மாவட்டங்கள் மட்டுமன்றி மாநில தலைநகர் காந்திநகரிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
காந்திநகரில் 15 ஆசிரியர்கள் தொடர்ந்து பலமாதங்களாக பணிக்கு வராமல் மாயமானதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 12 பேர் வெளிநாட்டில் குடியேறியதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்ச் மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு மேலாக 17 ஆசிரியர்கள் வேலைக்கு வராமல், சம்பளம் வாங்கி வந்தனர். இதில் பலர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவந்தது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு, அந்த ஆசிரியர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பலர் சமூக சேவை செய்வதாகவும், சிலர் உடல்நிலை அல்லது சொந்த காரணங்களுக்காக தொடர் விடுப்பு எடுக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானதாகவும் கூறியுள்ளனர்.
இதேபோல்தான் கடந்த 2015 முதல் 2022ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது புகார் எழுந்தது. இதில் 180 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் 150 பேர் வெளிநாடுகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.