இனி 650, 700 கிராம் ஆயில் பாக்கெட்டுகள் கிடைக்காது - மத்திய அரசு அதிரடி!

Soya Oil
Soya Oil
Updated on

சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளைக் குறிப்பிட்ட சில அளவுகளில் மட்டுமே விற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் பல்வேறு பிராண்டுகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து, தெளிவான முடிவுகளுடன் பொருட்களை வாங்க உதவுவதே இம்முயற்சியின் நோக்கம் என்று அரசாங்கம் தெரிவித்ததுள்ளது..

விலை குறித்த வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நுகர்வோர் பல்வேறு பிராண்டுகளை எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க உதவவும், சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒன்பது நிலையான அளவிலான பாக்கெட்டுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், சமையல் எண்ணெய்கள் சீரற்ற மற்றும் தரப்படுத்தப்படாத அளவுகளில் விற்கப்படுவதால், எந்த பிராண்ட் சிறந்தது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள சிரமம் ஏற்படுவதாக தொழில்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உதாரணமாக ஒரு நிறுவனம் 950 மி.லி., எண்ணெயை 190 ரூபாய்க்கும் மற்றொரு நிறுவனம் 1 லிட்டர் எண்ணெயை 200 ரூபாய்க்கம் விற்கலாம். விலை வித்தியாசம் 10 ரூபாய் மட்டுமே என்றாலும், முதல் பாக்கெட்டில் 50 மி.லி., குறைவாக இருக்கும். இதுபோன்ற மாறுபட்ட அளவுகள் காரணமாக வாடிக்கையாளர்கள் உண்மையான விலையை ஒப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
முதலில் பெட்ரோல் இப்போ எல்பிஜி, சமையல் எண்ணெய்..?? மக்களை வாட்டி எடுக்கும் ஈரான் போர்..!!
Soya Oil

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு:

பாமாயில், சோயாபீன் எண்ணெய், கடுகு எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்கள் இனி நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பாக்கெட்டுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். அதாவது தற்போது சந்தையில் உள்ள பல்வேறு அளவுகளுக்குப் பதிலாக, சமையல் எண்ணெய்க்கான பேக்கேஜிங் இனி 200 மில்லி லிட்டர் முதல் 20 லிட்டர் வரையிலான ஒன்பது நிலையான அளவுகளுக்குள் மட்டுமே பேக்கேஜிங் செய்யப்பட வேண்டும்.

திருத்தப்பட்ட நடைமுறையானது இனிமேல் 200 கிராம், 500 கிராம், 1 கிலோ, 2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ, 15 கிலோ, 20 கிலோ அளவுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும். இவ்விதிமுறைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

மேலும், பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி, கடுகு, நிலக்கடலை, எள், தவிடு எண்ணெய் (rice bran), பருத்தி விதை மற்றும் சோள எண்ணெய் உள்ளிட்ட முக்கிய சமையல் எண்ணெய்களுக்கும், கலப்பு சமையல் எண்ணெய்களுக்கும் இது பொருந்தும்.

650 கிராம், 700 கிராம் போன்ற நிலையான அளவுக்கு உட்படாத பாக்கெட்டுகள் சந்தையில் இருந்து நீக்கப்படும். புதிய விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உற்பத்தியாளர்கள், பேக்கர்கள் (பொட்டலமிடுபவர்கள்) மற்றும் இறக்குமதியாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

பாக்கெட்டில் எண்ணெயின் அளவு லிட்டரில் (Volume) குறிப்பிடப்பட்டாலும், அதற்கான சமமான எடை (Equivalent Weight) விவரமும் கட்டாயமாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

மலிவு விலையிலான சிறிய பாக்கெட்டுகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், 200 மில்லி அல்லது 200 கிராமுக்குக் குறைவான அளவிலான பாக்கெட்டுகள் மற்றும் சிறிய வகை சமையல் எண்ணெய்கள் இந்த தரப்படுத்துதலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வெவ்வேறு நிறுவனங்களின் எண்ணெய் பாக்கெட்டுகளின் விலையை வாடிக்கையாளர்கள் எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். மேலும் பொருட்களின் அளவு மற்றும் விலையை நுகர்வோர் எளிதாக ஒப்பிட்டு அறிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சமையல் எண்ணெய் அதிகம் சேர்த்தால் என்ன நடக்கும்? உஷார்!
Soya Oil

நாட்டின் சமையல் எண்ணெய் துறையில் சுமார் 90 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தொழில் சங்கங்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com