

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஏ.ஐ. மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆபாசம், போலி மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே வேளையில், அதன் மூலம் பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் ஆபாச சித்தரிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின், எக்ஸ் வலைத்தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாட்ஜிபிடி போல, டீப்ஃபேக் என்ற ஏஐ தொழில்நுட்பத்தை எக்ஸ் வலைதளம் அறிமுகம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறியு என்னும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்படும் சட்டவிரோதம், ஏமாற்றும் தன்மை கொண்டது.
பாலியல் சுரண்டல், அனுமதியில்லா உள்ளடக்கம், போலி ஆவணங்கள், குழந்தை பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கம், வெடிகுண்டுகள், ஆள்மாறாட்டம் போன்றவற்றுடன் தொடர்புடைய படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியாகி வேகமாக பரவுகின்றன. இதனால் இதனை பயன்படுத்தும் பயனர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே கிராக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்க்க, எக்ஸ் நிறுவனம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தடுக்க மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் வெளியாகி உள்ளநிலையில் அதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் மற்றும் டீப்ஃபேக் போன்ற உள்ளடக்கங்களை கையாள்வதில் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் போன்ற ஆன்லைன் தளங்களுக்கு மத்திய அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில், தகுதியான அதிகாரிகள் அல்லது நீதிமன்றங்கள் குறியீடும் செயற்கை உள்ளடக்கங்களை 3 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ல் செய்யப்பட்ட திருத்தங்களை அரசு அறிவித்துள்ளது. இவ்விதிகளில் ஏ.ஐ. மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களுக்கு முதன்முறையாக தெளிவான வரையறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனி ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் எந்தவொரு புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோ பதிவிலும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது சித்தரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கும் வகையில் Watermark இருக்க வேண்டும். மேலும் அந்த Watermarkஐ பயனாளர்கள் அழிக்கவோ அல்லது மறைக்கவோ முடியாதபடி இருக்க வேண்டும். ChatGPT, Gemini மற்றும் Grok போன்ற AI சேவைகள், இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை பயனாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
புதிய விதிகள் வரும் 20-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு மாற்றங்களும் ஏற்பட உள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அரசிதழில் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர் புகார் தீர்வு தொடர்பான காலக்கெடுகளும் குறைக்கப்பட்டுள்ளன.