

தமிழக சட்டசபைக்கு தேர்தல் முடிந்து கடந்த 4-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமனறப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு ஆதரவு கொடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளதால் தவெகவின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது.
கடந்த 3 நாட்களாக தமிழக அரசியல் களத்தில் நீடித்த பரபரப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தவெகவிற்கு இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 4-வது முறையாக தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார். அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்ட நிலையில் விஜய், இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இறுதியாக இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதலமைச்சராக நியமனம் செய்த ஆணையை விஜயிடம் ஆளுநர் அர்லேகர் வழங்கினார்.
தவெக தலைவர் விஜய் இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவருடன் சேர்த்து ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உட்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்த நிலையில் வரும் மே 13-ம்தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சராக பதியேற்க உள்ள தவெக தலைவர் விஜய் சமீப காலமாக எந்த ஒரு விஷயம் செய்வதாக இருந்தாலும் ஜோதிடரின் ஆலோசனையை கேட்பதாக கூறப்படுகிறது. 3-வது முறையாக ஆளுநரை சந்திக்க செல்லும் போது கூட விஜய் தன்னுடன் ஜோதிடரையும் அழைத்துச்சென்றதுடன், நெற்றியில் திலகமிட்டு, வலது, கை மணிக்கட்டில் சிகப்பு நிறத்தில் ஏதோ கயிறு கட்டி இருந்தார்.
அதுமட்டுமின்றி பொதுவாக விஜய் காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் வலம் வருவார். ஆனால் நேற்று முன்தினம் ஆளுநரை சந்திக்க சென்ற போது விஜய் வழக்கத்திற்கு மாறாக ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.
இதையெல்லாம் பார்க்கும் போது விஜய் ஜோதிடரின் அறிவுறுத்தலின்படியே நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே முதலில் விஜய் பதவியேற்க ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு தான் நேரம் கேட்கப்பட்டது. 3 மணி புதன் ஓரையாகும். புதன் ஓரை சுப ஓரை மற்றும் விவேக தன்மையுடையது. நல்ல விஷயங்களை இந்த ஓரையில் செய்யும் போது எந்த தடங்கல்களும் இன்றி நல்ல பலனளிக்கும்.
ஆனால் இன்று காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்க உள்ள ஓரை சனி ஓரையாகும். சனி ஓரை சுப ஓரை அல்ல என்பதால் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. பொதுவாக சனி ஓரை சுறுசுறுப்பில்லாத மற்றும் தாமதப்படுத்தும் தன்மையுடையது. நல்ல விஷயங்களை இந்த ஓரையில் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரையில் ஆரம்பிக்கும் எந்த செயலும் தடங்கல்கள் நிறைந்ததாகவே இருக்கும் என்பதால் இந்த ஓரையில் யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள்.
பல்வேறு தடைகளையும், பிரச்சனைகளையும் கடந்து விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதன் பிறகாவது அவருக்கு எந்த சோதனையும் வரக்கூடாது என்பது தான் தமிழக மக்களின் விருப்பமாகும்.