ஊபர், ஓலா, ரேபிடோ போன்ற நிறுவனங்கள் தங்களின் செயலிகள் வழியாக போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன.இவைகள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் தங்கள் பயணிகளிடமிருந்து அதிக கட்டணங்களை வசூலித்து வருகின்றன. சில ஓட்டுனர்கள் கணக்கில் வராத கூடுதல் தொகையையும் தங்கள் பயணிகளிடம் கேட்டு அழுத்தம் கொடுக்கிறார்கள்.இந்நிலையில் இதற்கு விரைவில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும் என மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் அறிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில், ஆட்டோ, கால் டாக்ஸிகளில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.வாடகை கார், பைக் மற்றும் ஆட்டோக்களை இயக்கும், ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள், தங்கள் தேவை நேரத்துக்கு ஏற்ப தங்கள் கட்டணங்களை நிர்ணயம் செய்து வருகின்றன. 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் அதிகப் பயன்பாட்டு நேரங்களில், பல மடங்கு பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. இது தொடர்பாக பயணிகளிடையே தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில், மக்களவையில் சமீபத்தில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை டாக்சி நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரக் கட்டணணங்களில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பொதுமக்கள் பயணிக்க வசதியாக, 'பாரத் டாக்ஸி' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் சோதனை ஓட்டம் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். வாடகைக்கார் ஓட்டுநர்களின் வருவாயை பெருக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த பாரத் டாக்ஸி செயலி ’சஹாகர் டாக்ஸி கூட்டுறவு லிமிடேட்’ என்ற பெயரில் செயல்பட உள்ளது.இந்த புதிய நடைமுறை ஓட்டுநர்களுக்கு சொந்தமான கூட்டுறவு மாதிரியில் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
இதன்மூலம் வாடகை வாகன ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஓட்டுநர் தன் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தினால், மொத்தக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 80 சதவீதத்தையும், ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களை இயக்கும் போது மொத்தக் கட்டணத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதத்தையும் பெற முடியும்.
வாடிக்கையாளர்கள் புறப்படும் இடத்தில் இருந்துதான், வாடகை கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் வாடிக்கையாளரை ஏற்றிக் கொள்வதற்காக ஓட்டுநர் தான் இருக்கும் இடத்தில் இருந்து வாடிக்கையாளரின் இடத்திற்கு பயணம் செய்யும் தூரம் 3 கிலோமீட்டருக்கு உட்பட்ட தூரத்திற்கு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை வாகன ஒருங்கிணைப்பாளர்கள், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் அதிகப் பயன்பாட்டு நேரங்களில் மாநில அரசு நிர்ணயித்த அடிப்படை கட்டணத்தை விட இரண்டு மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அதிக பயன்பாடு இல்லாத நேரங்களில் குறைந்தபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்கலாம் என்றும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த பாரத் டாக்ஸி செயலி விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.இது பயன்பாட்டுக்கு வந்தால் வாடகைக் கார், இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்திச் செல்வோர்களின் பயணத்திற்கான செலவு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.