

தமிழக கூட்டுறவுத் துறையானது பொது விநியோகத் திட்டத்தின் மூலம், பொது மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருள்களை வழங்கி வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்தையும் பொதுமக்கள் எளிதில் பெற, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் ‘பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்களை’ நடத்தி வருகிறது தமிழக அரசு. இதன்படி நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்டத்திற்கான மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (டிசம்பர் 13) நடைபெற உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை டிசம்பர் 13 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சென்னையில் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண்ணைப் பதிவு செய்தல் அலலது மாற்றுதல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் சம்பந்தப்பட்ட சேவைகள் முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுதவிர ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருள் வாங்க முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றும் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகள் செயல்படும் விதம், சேவைக் குறைபாடு மற்றும் தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருள்கள் குறித்த புகார்களையும் பொதுமக்கள் இங்கு பதிவு செய்யலாம். இந்தக் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் இருக்கும் ரேஷன் கார்டுதாரர்கள், அரசின் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கொள்ளப்படுகிறார்கள்.
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள, ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஆன்லைன் குறித்த புரிதல் இல்லாத பாமர மக்களுக்கு உதவும் வகையில் குறை தீர்ப்பு முகாம்களை தமிழக அரசியல் நடத்தி வருகிறது. இந்த முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, ரேஷன் கார்டில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை செய்து கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தவிர்த்து உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலும் நாளை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைதீர்ப்பு முகாம் நடக்கவுள்ளது.
இதுதவிர அஞ்சல் துறை சார்பில் டிசம்பர் மாதத்தில் மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாமும் நடக்கவுள்ளது. இதன்படி தாம்பரம் மண்டலத்தில் வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு குறைதீர்ப்பு முகாம் நடக்கவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இன்று மாலைக்குள், dotambaram.tn@indiapost.gov.in என்ற இ-மெயில் முகவரி வழியாக தங்களது குறைகளை பதிவு செய்யலாம்.