

அரசு மருத்துவமனைகளில் இணையதளம் வாயிலாக OP சீட்டு பெறும் சேவையை, மேலும் எளிமைப்படுத்தும் வகையில், QR Code சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, மொபைல் செயலி மற்றும் கியூஆர் கோடு (QR Code) மூலம் 'ஆன்லைன் ஓபி சீட்டு' (OP Ticket) பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் செயல்படத் தொடங்கி உள்ள இந்த சேவை, விரைவில் செயலி மூலம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்ற அந்தஸ்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெற்றுள்ளது. அந்தவகையில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 300 ஆண்டுகால வரலாற்றை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கு சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வந்து தங்கி சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சிறப்பு சிகிச்சைகளுக்காக இங்கு வருவது உண்டு. குறிப்பாக தினமும் 10,000 பேருக்கு மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய, நடுத்தர மக்கள் அதிக அளவில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையையே பயன்படுத்துகிறார்கள். இங்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் புற்றுநோயியல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.
இங்கு (RGGGH) காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை அனைத்து மருத்துவ துறை சார்ந்த புறநோயாளிகள் (OP) பிரிவும் பரபரப்பாக காணப்படும். புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு முன்பு தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்து சீட்டு பெற வேண்டும். 3-வது கோபுர கட்டிடத்தின் கீழ் பகுதியில் 12 கவுண்டர்களில் புற நோயாளிகள் சீட்டு வழங்கப்படுகிறது.
இங்கு எப்போதுமே நீண்ட வரிசை காணப்படும். மேலும் நோயாளிகள் காத்திருந்து சீட்டுகளை பெற்றால் தான் சிகிச்சை பெற முடியும். இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கூட்டமும், வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகினார். இதனை எளிமைப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அருண் ராஜ் முடிவு செய்தார்.
அந்தவகையில் புறநோயாளிகள் எளிதாக ஓபி (OP) சீட்டை பெற்று செல்லும் வகையில் கியூ.ஆர். கோடு (QR Code) திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சோதனை அடிப்படையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கியூ.ஆர்.கோடு முறையில் புறநோயாளிகள் சீட் வழங்கப்பட்டது.
சோதனை முறையில் செய்யப்பட்ட இந்த மாற்றம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் செயல்பட்டதால் தற்போது இந்த நடைமுறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க, ஆதார் அடிப்படையிலான QR கோடு மூலம் டோக்கன் (சீட்டு) பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. நோயாளிகள் அல்லது உறவினர்கள் தங்களது செல்போன் மூலம் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தால் ஓ.பி. சீட்டு அவர்களது செல்போனுக்கு வந்துவிடும்.
புற நோயாளிகள் நுழைவு சீட்டு பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலை இதன் மூலம் மாற்றப்பட்டு உள்ளது. நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க தேவையில்லை. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நுழைவுப் பகுதியில் உள்ள 2 தூண்களில் கியூ.ஆர்.கோடு ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு தூணில் 4 வீதம் 8 ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள பிரத்யேக கியூஆர் குறியீட்டை நோயாளிகள் தங்களது செல்போனில் ஸ்கேன் செய்து, 'Scan & Share' (ஸ்கேன் மற்றும் பகிர்வு) செயலி மூலம் டோக்கன் எண்ணைப் பெறலாம்.
ஆதார் எண்ணுடன் இந்த தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருப்பதால், சிகிச்சை பெற வருகின்ற புறநோயாளிகளின் பெயர், விவரம் போன்றவை எளிதாக பதிவாகிவிடும், எந்த மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை மட்டும் பதிவிட வேண்டும்.
அதனைக் குறிப்பிட்டால் அவர்களது செல்போனுக்கு புற நோயாளிகள் சீட்டு சென்று விடும். டோக்கன் எண் கிடைத்ததும், அதனை கவுண்ட்டரில் காண்பித்து நேரடியாக ஓபி சீட்டைப் பெற்று சம்பந்தப்பட்ட மருத்துவ பிரிவுக்கு சென்று காண்பித்து சிகிச்சை பெற்று கொள்ளலாம். பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த வசதி மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கியூ.ஆர். கோடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் டிஜிட்டல் முறை தெரியாதவர்களுக்காக மருத்துவமனைகளில் வழக்கமான நேரடி பதிவு (பழைய சீட்டு நடைமுறை - Manual Registration) நடைமுறையும் பயன்பாட்டில் இருக்கும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், திருநெல்வேலி, சேலம், ராமநாதபுரம், மற்றும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.