

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு 24 மணி நேரமும் அடையாள அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை பிரிவுக்கு எதிரே 12-ம்தேதி தூங்கிக் கொண்டிருந்த ரவுடி ஆதியை சிலா் வெட்டி கொலை செய்தனா். நூற்றுக்கணக்கானோா் வந்து செல்லும்பொது மருத்துவமனைக்குள் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவா்களுடன் வருவோரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்தக் குற்ற நிகழ்வு, பல்வேறு விமா்சனங்களுக்கும் வித்திட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, தமிழக மருத்துவத்துறை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இனிமேல் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு அடையாள பட்டை (டேக்) வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மருத்துவமனை முதல்வர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கி உள்ளார்.
அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை பொறுத்தவரை, 30-க்கும் மேற்பட்ட துறைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பயனாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் எந்த துறைக்கு செல்ல வேண்டும் என்ற வரைபடத்துடன் கூடிய குறியீடு அடையாள அட்டையை மருத்துவமனையின் முதல்வர் வழங்கினார்.
மருத்துவமனைக்கு உள்நோயாளியாக வந்து செல்லும் மருத்துவ பயனாளர்களுக்கு நீல நிற அடையாள அட்டையும், அந்த அட்டையில் நோயாளியின் பெயர், என்ன உறவு முறை, செல்போன் எண், அனுமதிக்கப்பட்ட வார்டு உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் அனைத்து நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மின் விளக்குகள், ஜெனரேட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் அரசு மருத்துவமனையின் வெயிட்டிங் ஹால் உள்ளிட்ட இடங்களில் அடையாள அட்டை இல்லாமல் யாராவது உறங்கினால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும், சந்தேகிக்கப்படும் நபர் யாரேனும் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.